வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2014 (15:33 IST)

2016 தேர்தலில் நாம் தமிழர் கட்சி அசைக்க முடியாத மாற்றத்தை ஏற்படுத்தும் - சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர், தேனாம்பாள் திருமண அரங்கில் மாவீரர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது அவர் பேசுகையில், மயிலுக்குப் போர்வையும், முல்லைக்குத் தேரையும் தந்ததே வள்ளல் தன்மை என்றால், தமது உயிரையே இந்த இனத்திற்காக கொடையாகக் கொடுத்தவர்கள் எவ்வளவு பெரிய மாவீரர்கள்.
 
பனைமரம் தமிழர்களின் தேசிய மரம். ஈழத்தில் களத்தில் பலியான மாவீரர்களாக விழுந்தவர்களின் எண்ணிக்கையைவிட பனை மரங்களின் எண்ணிக்கை அதிகம். சுவரொட்டியில் துப்பாக்கியை பொதித்து வீரவணக்கம் செலுத்த முடியாத போது பனை மரத்தை பொதித்து வீரவணக்கம் செலுத்துகிறோம்.
 
ஏனென்றால், பனை மரம் நம் இனத்தின் குறியீடு. உலகில் எங்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சாவுக்கு வழியனுப்பியதில்லை. ஆனால், அது தமிழீழத்தில் நடந்தது. நான் சந்தித்த தாய் ஒருத்தி, பிரபாகரனின் காலடியில் கிடக்கும் புல் கூட புலியாக மாறி போராடும் என்று சொன்னாள்.
 
புழு கூட தன்னை தாக்குகிறபோது துடித்தெழுந்து எதிர்ப்பை காட்டுகிறது. பூனையை ஒரு அறைக்குள் விட்டு அடித்தால் அதுகூட புலியாக மாறுகிறது. ஆதலால், மானத்தமிழ் பிள்ளைகள் போராட வேண்டியிருக்கிறது. அதிகாரம் என்பது அற்பம்.
 
நமது இலக்கு தேசிய இனத்தின் விடுதலை. நமது மாவீரர்கள் களத்தில் யாருக்காக விழுந்தார்கள்? நமக்காக. நம்மை நம்பி. நம்மைப்போல இன்னொரு அடிமை பிறக்கக்கூடாது என்பதற்காகத்தான் விழுந்தார்கள். ஏழைகளாக கூட இருக்கலாம். ஆனால், ஒருபோதும் கோழைகளாக இருக்கக்கூடாது.
 
மாவீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது. உலக நாடுகளின் துணைகொண்டு ஈழ நிலத்தில் புலிக்கொடியை இறக்கினார்கள். அந்த நிலையிலே இந்த மண்ணில் புலிக்கொடியை நாங்கள் தூக்கி பிடித்தோம். இதை இனி இறக்குவதற்கு வாய்ப்பே இல்லை.
 
இந்த நாட்டில் நான் விரும்பாத போது சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் திணிக்கிறார்களே, நாம் விருப்பப்பட்டு படிக்கலாம். ஆனால், இதைத்தான் படிக்க வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? இப்படி மற்ற மொழிகளையே முன்னிறுத்தினால் என் மொழி எப்படி வாழும்?
 
யாரும் வரலாம். வாழலாம். ஆனால் எமது சொந்தவரே இனி ஆளணும். வந்தவரை எல்லாம் வாழ வைப்போம். இனி மண்ணின் மைந்தரையே ஆள வைப்போம். 2016–ல் அசைக்க முடியாத மாற்றத்தை நாம் தமிழர் கட்சி ஏற்படுத்தும்.
 
இவ்வாறு சீமான் பேசினார்.