ஜெயலலிதாவின் சிகிச்சை; ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினாமா இரண்டிலும் மர்மம் உள்ளது: ஸ்டாலின் விளாசல்!

ஜெயலலிதாவின் சிகிச்சை; ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினாமா இரண்டிலும் மர்மம் உள்ளது: ஸ்டாலின் விளாசல்!


Caston| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (12:42 IST)
தமிழக அரசின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இது தலைமை செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதில் மர்மம் உள்ளதாக கூறினார்.

 
 
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனின் பதவி காலம் முடிந்த பின்னரும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு ஆலோசகர் பதவி கொடுத்து வைத்திருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அரசு இயந்திரத்தை இயக்கியதும் இவர் தான் என கூறப்பட்டது. இந்நிலையில் இவர் திடீரென நேற்று ராஜினாமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதி வரை உள்ளது ஆனால் அவர் முன்கூட்டியே ராஜினாமா செய்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
 
இந்நிலையில் எண்ணூர் கடற்கரையோரம் மிதந்து வரும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஷீலா பால கிருஷ்ணனின் திடீர் ராஜினாமா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
 
அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் போலவே ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதும் மர்மமாகவே உள்ளது என தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :