செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K..N.Vadivel
Last Updated : திங்கள், 22 ஜூன் 2015 (23:31 IST)

மியான்மர் தமிழர்கள் மீது தாக்குதல்: தமிழன் என்றால் அகதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - வைகோ ஆவேசம்

மியான்மர் நாட்டில் இருந்து தமிழர்கள் விரட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தமிழன் என்றால் அகதி என்று அகராதியில் பொருள் கூறும் நிலைமை ஏற்பட்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்துத் தெரிவித்துள்ளார்.
 
மியான்மர் நாட்டில் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருபவர்கள் தமிழர்கள். அந்த நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படுவதாக வரும் தகவல்கள் வேதனை அளிக்கிறது.
 
மியான்மரின் தட்டோன், பஹமோ மாவட்டங்களில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழர்கள், அங்கு ஏற்பட்டுள்ள கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் சிறுபான்மையினரான ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருவதால், பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்கின்றனர்.
 
மலேசியாவுக்கு அடைக்கலம் தேடிப்போன தமிழர்கள், மலேசியாவின் எல்லையில் தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தமிழன் என்றால் அகதி என்று அகராதியில் பொருள் கூறும் நிலைமை ஏற்பட்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
 
எனவே, மத்திய அரசு உடனே தலையிட்டு, தமிழர்கள் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் உரிமையையும், வாழ்க்கையையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.