வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2015 (10:14 IST)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக, அக் கட்சியின் விவசாய தொழிலாளர் அணி செயலாளராக இருந்த முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தா.பாண்டியனின் பதவிகாலம் முடிந்ததைத் தொடர்ந்து புதிய மாநில செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கான தேவை ஏற்பட்டது.
 
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கோவையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இதன் இறுதி நாளில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
 
அப்போது மாநில செயலாளர் பதவிக்கு, மாநில துணை செயலாளராக உள்ள மகேந்திரன், மற்றும் விவசாய தொழிலாளர் அணி செயலாளராக இருந்த முத்தரசன் ஆகியோர் போட்டியிட்டனர்.
 
இதில் முத்தரசன் 63 வாக்குகளும், மகேந்திரன் 61 வாக்குகளும் பெற்றனர். எனவே 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முத்தரசன் புதிய மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
 
மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தரசனுக்கு வயது 65. இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர்.
 
இவர் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளராக இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி ஒருவர் 1 அல்லது 2 முறை மட்டுமே மாநிலச் செயலாளர் பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.