1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (15:11 IST)

’முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவது ‘பிட்’ அடிக்கவே வழி வகுக்கிறது’ - எச்.ராஜா

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவது தேர்வுகளில் ‘பிட்’ அடிக்கவே வழி வகுக்கிறது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
 
இது குறித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய எச்.ராஜா, “இந்த மாதம் காவிரியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு இருக்க வேண்டும். ஆனால், தண்ணீர் வரத்து இல்லாததால் திறக்க முடியவில்லை.
 

 
தமிழகத்துக்கு 234 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்து விடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் போட்ட மனுவையும் திமுக வாபஸ் வாங்கி தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டது. எனவே அவர்களை ஆட்சியில் அமர வைக்கக்கூடாது. பாஜக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையுமானால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
 
1967ஆம் ஆண்டு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வரும் முன்பு தமிழகம் பொருளாதாரத்தில் 2வது இடத்தில் முன்னேறி இருந்தது. ஆனால், இன்று பொருளாதாரத்தில் பல அடிகள் பின்நோக்கி சென்றுவிட்டது. இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் உள்ளது.
 
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் கடந்த ஆண்டு மட்டும் 1,500 அரசு பள்ளிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டும் சுமார் 2 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
 
இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் இஸ்லாமிய மாணவிகளும் பர்தா அணிகிறார்கள். இதைத் தடை செய்ய வேண்டும். இது மாணவிகளிடையே பிரிவினையை ஏற்படுத்தவே வழி வகுக்கும். அது மட்டுமல்லாமல், தேர்வுகளில் பிட் அடிக்க, காப்பி அடிக்கவும் இது வழி வகை செய்து விடும். எனவே பர்தா அணிவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று கூறியிருந்தார்.