வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (11:45 IST)

அமைச்சர் தம்பி கொலையில் பேரம் பேசப்பட்ட தொகை: அதிர்ச்சியில் காவல்துறை

அமைச்சரின் தம்பியை கொலை செய்யும் கூலிப்படை தலைவனுக்கு ரூ.6 லட்சத்தில் வீட்டுமனை, அவரது அடியாளுக்கு மினி வேன் பேரம் பேசப்பட்ட தகவல் காவல்துறையினர் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
 
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராமன் மகன் ரவி(45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன். கந்தன்கொல்லை அடுத்த புஜ்ஜங்கண்டிகை பகுதியில் உள்ள மூன்று ஏக்கர் வில்லங்க நிலத்தின் பிரச்சனையில் தலையிட்ட இவரை, கடந்த 13 ஆம் தேதி பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் கொலை செய்தனர். 
 
இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து, கொலைக்கு மூலகாரணமாக இருந்ததாக அதிமுகவை சேர்ந்த செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், நெமிலிச்சேரி திருநாவுக்கரசு ஆகிய இருவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கூலிப்படை தலைவனான வேப்பம்பட்டு முருகன்(35), வெள்ளவேடு தாஸ் என்கிற புல்லட் தாஸ்(42), பெரவள்ளூர் குட்டி என்கிற பத்மநாபன்(45), அனகாபுத்தூர் சரண் என்கிற சரண்ராஜ்(28) உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஆயுதங்களையும், மூன்று பைக்குகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில், புல்லட் தாஸ், குட்டி என்கிற பத்மநாபன், சரண்ராஜ் ஆகியோர் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலம் காவல்துறையினர் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
 
நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய். அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தரவேண்டும் என்று ரவியை கொலை செய்வதற்கான கூலியாக முதலில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், ரவியை கொலை செய்தவுடன் அந்த நிலத்தை விற்பனை செய்தால், அனைவருக்கும் சந்தேகம் வரும் என்று கூலிப்படையை அமர்த்தியவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது, எனக்கு சொந்தமாக வீடு வேண்டும் என்று கூறியுள்ளான் தாஸ். அதற்கு, கூலிப்படையின் தலைவன் புல்லட் தாசிற்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனை வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
 
மேலும், தாசின் அடியாளான குட்டி என்கிற பத்மநாபன் வியாபாரம் செய்யவும், நிரந்தர வருமானத்துக்காக ஒரு மினி வேன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூலிப்படையில் வயதில் சிறியவனான சரண் என்கிற சரண்ராஜுக்கு ஜாலியாக சுற்றி வருவதற்கு பைக் தேவை என்று கேட்டுள்ளான். மேலும், அவன் தீபாவளி செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கேட்டான். மேலும், மற்ற அடியாட்களுக்கான கூலியை பணமாக தரவும், கூலிப்படையை அமர்த்தியவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.