வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 25 ஜூலை 2014 (18:18 IST)

திமுக கவுன்சிலரின் தாயை கொன்று நகைகளை திருடியவர் குடிபோதையில் உளறி சிக்கினார்

சென்னை கொளத்தூர்  திமுக கவுன்சிலரின் தாயாரை கொலை செய்து நகைகளை திருடிய கொலையாளி குடிபோதையில் உளறி காவல்துறையில் மாட்டிக் கொண்டார்.
 
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மனைவி பத்மாவதி (வயது 83). இவர் திமுக கவுன்சிலர் தேவ ஜவஹரின் தாயார் ஆவார்.
 
கடந்த 17 ஆம் தேதி மதியம் பத்மாவதி வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கையில் சிராய்ப்பு காயம் இருந்தது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பத்மாவதி இயற்கை மரணம் அடைந்ததாக கருதி பிரமாண்ட இறுதி ஊர்வலம் நடத்தி உடலை எரித்துவிட்டனர்.
 
பத்மாவதியின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் மலர் அஞ்சலி செலுத்தினார்.
 
இந்த நிலையில் நேற்று வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் திமுக கவுன்சிலர் தேவஜவஹரிடம் உங்கள் தாயார் இயற்கை மரணம் அடையவில்லை. உங்களது எதிர்வீட்டில் வசிக்கும் கண்ணதாசன் என்பவர் உங்கள் தாயார் பத்மாவதியை கொலை செய்து விட்டு 17 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டார்.
 
மது குடிக்கும்போது போதையில் இருந்த அவர் நடந்த சம்பவத்தை என்னிடம் உளறிவிட்டார். இதை மறைக்க விருப்பம் இல்லாததால் உங்களிடம் கூறுகிறேன் என்றார்.

இதுபற்றி கவுன்சிலர் தேவஜவஹர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வில்லிவாக்கம் உதவி ஆணையர் கண்ணன், கொளத்தூர் ஆய்வாளர் கந்தகுமார், துணை ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
 
கொலை செய்யப்பட்ட பத்மாவதியின் எதிர்வீட்டில் வசித்த கண்ணதாசன் (22) என்பவரை காவல்துறையினர் நேற்று இரவோடு இரவாக கைது செய்தனர்.
 
அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:–
 
கொலையாளி கண்ணதாசன் பட்டதாரி வாலிபர் ஆவார். பத்மாவதியின் எதிர்வீட்டில் வசித்து வந்தார். இதனால் அவர் அடிக்கடி 83 வயதான பத்மாவதி வீட்டுக்கு சென்று அவருக்கு உதவிகள் செய்து வந்தார். பத்மாவதியும் அதற்காக கண்ணதாசனுக்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்தார்.
 
கடந்த 17 ஆம் தேதி பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கண்ணதாசன் அங்கு சென்று பத்மாவதியிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் இல்லை என்று கூறினார். இதனால் கண்ணதாசன் பத்மாவதியின் முகத்தில் கையை வைத்து அழுத்தினார்.
 
இதில் மூச்சு திணறிய அவர் துடிதுடித்து சிறிது நேரததில் இறந்து விட்டார். அப்போது பத்மாவதி கழுத்தில் 3 செயின்களை அணிந்திருந்தார். அதில் 17 பவுன் கொண்ட 2 செயின்களை கண்ணதாசன் கொள்ளையடித்தார். மற்றொரு செயினையும், காது, மூக்கில் அணிந்திருந்த நகையையும் அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
 
இதற்கிடையே பத்மாவதி இறந்து கிடப்பதையும் கையில் சிராய்ப்பு காயம் இருப்பதையும் குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர் வயதான காலத்தில் தவறி விழுந்து இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் என்று கருதி உடலை எரித்து விட்டனர்.

பத்மாவதியின் மரணம் மீது எந்தவித சந்தேகமும் வராததால் கண்ணதாசன் நிம்மதி பெருமூச்சு விட்டார். அவர் வில்லிவாக்கத்தை சேர்ந்த கண்ணனிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். எனவே கொள்ளையடித்த நகையை விற்று அவரது கடனை அடைக்க முடிவு செய்தார்.
 
இதற்காக கண்ணதாசன், கண்ணனை அழைத்துக் கொண்டு நகையுடன் சேட்டு ஒருவரின் அடகு கடைக்கு சென்றார். அங்கு தனது பாட்டி நகைகள் என்று கூறி ரூ.2 லட்சத்துக்கு நகையை விற்றார்.
 
பின்னர் அதில் ரூ.90 ஆயிரத்தை கண்ணனிடம் வாங்கிய கடனுக்காக கொடுத்தார். மீதி பணத்தை பையில் வைத்துக் கொண்டு கண்ணதாசனும் கண்ணனும் மது குடிக்க சென்றனர்.
 
கண்ணதாசன் முழு போதையில் இருந்தபோது கண்ணன் அவரிடம் உனக்கு பாட்டி கிடையாதே. நகைகள் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டார். அதற்கு கண்ணதாசன் எனது எதிர்வீட்டில் வசிக்கும் பாட்டி பத்மாவதியை கொலை செய்து நகையை கொள்ளையடித்தேன்.
 
ஆனால் அது தெரியாமல் உடலை இறுதி சடங்கு நடத்தி எரித்துவிட்டனர். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. நீயும் வெளியில் யாரிடமும் சொல்லி விடாதே என்று போதையில் உளறினார்.
 
இந்த சம்பவத்தை கேட்டு கண்ணன் வெலவெலத்து போனார். நகையை விற்று கடனுக்கான பணத்தை வாங்கியுள்ளதால் இதில் தாம் எங்கே சிக்கிவிடப் போகிறோமோ என்று பயந்த கண்ணன் திமுக கவுன்சிலர் தேவஜவஹரை சந்தித்து நடந்ததை கூறி விட்டார்.
 
இதன் மூலம் கொலையாளி கண்ணதாசன் காவல்துறையில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து கண்ணதாசனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திருகிறார்கள்.