1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (18:14 IST)

எஸ்.ஐ.யை கொன்றது ஏன்? எப்படி? கள்ளக்காதலி அளித்த வாக்குமூலத்தின் முழு விவரம்

காவல்துறை துணை ஆய்வாளரை வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின் முழு விவரம்.

சிதம்பரத்தில் துணை ஆய்வாளர் கணேசனை வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி வனிதா காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
 
கிள்ளை காவல் நிலையத்தில் கணேசன் சப்–இன்ஸ்பெக்டராக இருந்த போது ஒரு விவகாரம் தொடர்பாக கணேசனை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கும், அவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
 
நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அவருடன் சென்று இருக்கிறேன்.
 
இந்த நிலையில் கிள்ளை காவல் நிலையத்தில் இருந்து அவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வீடு எடுத்து தங்கினார். நானும் அங்கு சென்று அவருடன் அடிக்கடி தங்கினேன்.

இதற்கிடையே எங்களுடைய கள்ளக்காதல் விவகாரம் என்னுடைய கணவர் கலைமணிக்கு தெரியவந்தது. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே அவரை பிரிந்து சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூரில் உள்ள எனது தாயார் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
 
எனக்கு 7 வயதில் ஒரு குழந்தை உள்ளது. குழந்தையை எனது கணவரிடம் விட்டுவிட்டேன். கணேசனுடன் நான் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்திருந்தார். அதை நான் நம்பினேன்.
 
இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி அவர் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது எனக்கு தெரியவந்தது. எனவே இதுபற்றி அவரிடம் பேசி சண்டை போட்டேன். அப்போது 22 ஆம் தேதி (நேற்று) சிதம்பரம் வருகிறேன். அங்கு நாம் பேசிக்கொள்ளலாம் என்று கூறினார்.
 
அதன்படி நேற்று அவர் வந்தார். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற வெறியோடு நான் இருந்தேன். எனவே அரிவாள் ஒன்றை தயார் நிலையில் பையில் எடுத்து வைத்துக்கொண்டு அங்கு சென்றேன்.
 
வீடு அருகே சென்றதும் அரிவாளை அருகில் உள்ள செங்கல் குவியல் அருகே மறைத்து வைத்தேன். பின்னர் அவருடன் சென்று பேசிக்கொண்டிருந்தேன். கணேசனின் உதவியாளர் அய்யப்பன் வந்திருந்தார். அவரிடம் சாப்பாடு மற்றும் மது வாங்கி வரும்படி கணேசன் சொல்லி அனுப்பினார்.

அவர் வெளியே சென்று சாப்பாடு, மது வாங்கி வந்தார். அந்த நேரத்தில் வெளியே சென்ற நான் மறைத்து வைத்திருந்த அரிவாளை வீட்டிற்குள் எடுத்து வந்தேன். பின்னர் இருவரும் சாப்பிட்டு விட்டு உல்லாசமாக இருந்தோம். அவர் அதிகமாக மது குடித்து இருந்தார். இந்த களைப்பில் அயர்ந்து தூங்கினார்.
 
இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று கருதிய நான் வெளியில் இருந்து ஒரு செங்கலை எடுத்து வந்தேன். அவரை வெட்டுவதற்கு வசதியாக அதை அவருக்கு கழுத்துக்கு கீழே வைத்தேன். பின்னர் அரிவாளால் கழுத்தை சரமாரியாக வெட்டினேன்.
 
இதில் அந்த இடத்திலேயே அவர் பிணமானார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட நான் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன்.
 
எனது சேலையில் ரத்தக் கறை படித்து இருந்தது. எனவே இருட்டான ஒரு பகுதிக்கு சென்று வேறு சேலையை மாற்றிக்கொண்டேன். அவரை வெட்டிய அரிவாளை அங்குள்ள குட்டையில் வீசினேன். பின்னர் மெயின்ரோட்டுக்கு வந்த நான் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையத்துக்கு வந்தேன். அங்கு விருத்தாசலம் செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது. அதில் ஏறினேன். விருத்தாசலத்தில் இறங்கியதும் எங்கு செல்வது என்று தெரியவில்லை.
 
பேருந்து நிலையத்தில் சேலம் பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதில் ஏறி அமர்ந்தேன். அப்போது காவல்துறையினர் என்னை கண்டுபிடித்து கைது செய்தனர் என்று அவர் கூறினார்.