செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (11:32 IST)

பிரபல ரவுடி கொலை வழக்கில் 9 பேர் சரண்

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
 
சென்னை அம்பத்தூர் எம்.கே.பி நகர் இளங்கோ தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (37), பிரபல ரவுடி. இவர்மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர், உயிருக்கு பயந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அம்பத்தூரை விட்டு வெளியேறி, பட்டாபிராம் பகத்சிங் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்தாண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரபாகரன், நேற்று முன்தினம், அம்பத்தூர் சிவானந்தம் நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தனது நண்பர் சுரேஷை பார்க்க வந்தார். அதே பகுதியில் வசிக்கும் ஜெபஸ்டின் வீட்டில் சுரேஷும், பிரபாகரனும் மது அருந்தினர்.
 
அப்போது ஒரு கும்பல் வீடு புகுந்து, கத்தி, அரிவாளால் பிரபாகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. 
 
தடுத்த சுரேஷ் படுகாயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த அம்பத்தூர் காவல்துறையினர், பிரபாகரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.
 
இந்நிலையில், பிரபாகரன் கொலை வழக்கில் ஆசிரியர் காலனி, எம்.கே.பி.நகர், சிவானந்தம் நகர் பகுதிகளை சேர்ந்த விமல்ராஜ், ரஞ்சித்குமார், ராகுல், ஜெய்குமார், விஜய், மணி, சரவணன், சுரேந்தர், ராஜேஷ் ஆகிய 9 பேர் நேற்று செங்கல்பட்டு 2 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன் சரணடைந்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவின்படி அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.