வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (12:24 IST)

2016ல் கருணாநிதி தலைமையிலேயே திமுக ஆட்சி அமையும் - மு.க.ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், 2016 இல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“2008 இல் திமுகவின் முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது. அந்த விழாவில் கருணாநிதிக்கு பெரியார் விருதும், ஆற்காடு வீராசாமிக்கு அண்ணா விருதும், துரைமுருகனுக்கு பாவேந்தர் விருதும் வழங்கப்பட்டது.

ஆனால், அந்த விழாவில் எனக்கு மட்டும் மூன்று விருதுகள் கிடைத்தன. பெரியார், அண்ணா, கலைஞர் என மூன்றும் இணைந்த கலைஞர் விருது கிடைத்தது. இதை விடப் பெரிய பெருமை ஒருவருக்கு இருக்க முடியுமா?

எம்.ஜி.ஆர்., பிரிந்து சென்றார். வைகோ பிரிந்து சென்றார். அதனால் எல்லாம் திமுக அழிந்துவிடவில்லை. இன்றும் திமுக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு கருணாநிதியின் உழைப்புதான் காரணம்.

கருணாநிதி இல்லாவிட்டால் நாடு இல்லை. வீடு இல்லை. நான் இல்லை. ஒருமுறை ஸ்டாலினிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கருணாநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கருணாநிதி, உழைப்பு என்று கூறினார். இந்தப் பாராட்டை விட எனக்கு வேறு எந்தப் பதவியும் தேவையில்லை. கருணாநிதி விரும்பும் அந்த உழைப்பையே தர விரும்புகிறேன்.

துரைமுருகன் பேசுசியபோது கூறியதை, அப்படியே இங்கு வழிமொழிந்து சொல்கிறேன். 2016 இல் கருணாநிதி தலைமையிலேயே திமுக ஆட்சி அமையும்“ என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு மூலம் திமுவில் இதுவரை நிலவி வந்த குழப்பங்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.