வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2016 (14:37 IST)

கேரள அரசின் நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்துகிறது: ராமதாஸ்

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் கேரள அரசின் இந்நடவடிக்கையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
முல்லைப்பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு தருவதாகக் கூறி அணைப்பகுதியில் புதிய காவல் நிலையத்தை கேரள காவல்துறை இன்று திறக்கிறது.
 
கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா இந்த காவல் நிலையத்தை திறந்து வைக்கிறார். தமிழக நலனுக்கு எதிரான கேரள அரசின் இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.
 
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டதால் கேரளத்துக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
 
1980 ஆம் ஆண்டுக்கு முன்பாக அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது.
 
இதனால் அணையின் நீர்த்தேக்கப்பகுதி பரப்பு குறைந்ததை பயன்படுத்தி அப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகளை கேரள அரசு அதிகளவில் கட்டிக் கொண்டது.
 
இப்போது அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டதால் சுற்றுலா விடுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அடுத்தகட்டமாக அணையை வலுப்படுத்தும் பணிகளை முடித்து, நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் நீர்த்தேக்க பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளும் பயன்பாட்டை இழந்து விடும்.
 
இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை கேரள அரசு தொடர்ந்து தடுத்து வருகிறது.
 
பராமரிப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை முடக்குவதற்கான சதி திட்டத்தின் ஓர் அங்கமாகவே கேரள அரசு இப்போது புதிய காவல் நிலையத்தை திறக்கிறது.
 
அந்த காவல் நிலையத்திற்கு ஒரு துணை கண்காணிப்பாளர், 3 ஆய்வாளர்கள், 4 சார்பு ஆய்வாளர்கள் உட்பட 185 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
 
உண்மையாகவே பரந்து விரிந்து கிடக்கும் அணைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் இதை விட அதிக காவலர்கள் தேவை.
 
ஆனால், கேரள அரசின் நோக்கம் அணையை பாதுகாப்பது அல்ல; மாறாக தமிழக அதிகாரிகளை அச்சுறுத்த வேண்டும் என்பது தான்.
 
இந்த விஷயத்தில் உண்மை நிலவரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய காவல் நிலையத்தை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அதேநேரத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் கேரள அரசின் இந்நடவடிக்கையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.
 
உடனடியாக இதில் தலையிட்டு புதிய காவல் நிலையத்தை முடக்குவதுடன், மத்திய படைகளை காவலுக்கு நிறுத்தவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.