வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (10:04 IST)

தேமுதிகவில் இணைகிறார் திமுக விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்

திமுக வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் விரைவில் தேமுதிக வில் இணையவுள்ளார்.
 
மு.க.அழகிரியின் ஆதரவாளர் என்று கூறப்படும் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக படுதோல்வியடைந்தது.
 
திமுக அடைந்த இந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, முல்லைவேந்தன் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.
 
இந்த நோட்டீசுக்கு, முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் திமுக வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
 
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார் முல்லைவேந்தன்.
 
இந்த சந்திப்பிற்குப் பின்னர் முல்லைவேந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விரைவில் நான்  பத்தாயிரம் ஆதரவாளர்களுடன் தேமுதிகவில் இணைய உள்ளேன்.
 
அதில் 90 சதவீதம் பேர் திமுக வைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உண்மையாக உழைப்பவர்களை திமுக தலைமைக்கு பிடிக்காது. கருணாநிதி கையில் அந்த கட்சி இல்லை.
 
பெயர் அளவில் தான் அவர் தலைவராக உள்ளார். மற்றதை எல்லாம் மு.க.ஸ்டாலின்தான் கவனித்து வருகிறார். மு.க.அழகிரி எனது வீட்டிற்கு வந்தார் என்பதற்காக அவரது ஆதரவாளர் என்று என்னை கூறினார்கள்" என்று முல்லைவேந்தன் கூறினார்.
 
வி.முல்லைவேந்தன் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியில், கடந்த 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் 1996 ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.