வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (08:41 IST)

முல்லைப் பெரியாறு அணை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுக்கள் தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முல்லைப் பெரியாறு அணைக்கு 500 அடிக்கு கீழ் உள்ள வல்லக்கடவிற்கு செல்லும் பாதையில் 15 இடங்களில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்று இப்பணிகள் நடைபெற இருப்பதாக கேரள அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதில், முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிதாக அணை கட்டுவதாக கூறப்படும் பகுதியில் ஆழ்துளை எந்திரங்களை கொண்டு ஆய்வுப்பணிகளை தொடங்கி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயல் என்றும், எனவே ஆய்வு பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 
 
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- 
 
கேரள அரசு முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் குழு கடந்த 5.6.2015 அன்று அனுமதி வழங்கி இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
 
அதே நேரம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அதுபோன்ற அனுமதி எதுவும் கேரள அரசுக்கு வழங்கப்படவில்லை என்று அறிக்கை வெளியானது. இது குறித்து தமிழக முதலமைச்சர் 10.6.2015 அன்று பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
 
எனவே முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள மேற்கொண்டு அனுமதி எதுவும் வழங்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. 
 
இதேபோல், முல்லைப் பெரியாறு பகுதியில் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி தமிழக அரசு மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளது. 
 
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்க கோரும் தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.