வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 ஜனவரி 2015 (16:18 IST)

கூலிப்படையை ஏவி மருமகனை தீர்த்துக் கட்டிய மாமியார்

காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகனை கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டிய மாமியாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
தஞ்சை மாவட்டம் விஷ்ணம்பேட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆனந்தராஜ் (27) என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே தெருவைச் சேர்ந்த சந்தானகோபாலன் மகள் ஷர்மிளாவை (19) காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
இந்த காதல் திருமணத்தில் ஷர்மிளாவின் பெற்றோர், உறவினர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளது. இதனால் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் கேரளாவிற்கு தப்பி சென்று அங்கேய தங்கி வந்துள்ளனர்.
 
இந்நிலையில், ஷர்மிளா கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பமான தகவலை தாய் மோகனாம்பாளுக்கு ஷர்மிளா போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதில் மோகனாம்பாள் மிகுந்த வெறுப்படைந்தாலும் மகிழ்ச்சி அடைந்தது போல நடித்துள்ளார்.
 
மனதிற்குள்ளாக தனது மகளின் வயிற்றில் இருக்கும் வாரிசை அழிக்கவும், ஆனந்தராஜை ஒழித்துக்கட்டவும் முடிவு கட்டினார். இடையிடையே தாயும், மகளும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர்.
 
கடந்த ஒரு மாதம் முன்பு ஆனந்தராஜின் பெரியப்பா மகன் ராமச்சந்திரன் விஷ்ணம்பேட்டையில் இறந்து விட்டார். கடந்த 7ம் தேதி துக்கம் விசாரிக்க ஆனந்தராஜ்  6 மாத கர்ப்பிணியான  மனைவி ஷர்மிளாவையும் அழைத்துக்கொண்டு திருச்சி வந்துள்ளார்.
 
மகளை வீட்டில் விட்டு விட்டு மருமகனுடன் மோகனாம்பாள் விஷ்ணம்பேட்டை சென்றார். அங்குள்ள வீடு பாழடைந்து கிடக்கிறது. அதை மராமத்து செய்து விட்டு போகலாம். 2 நாள் இங்கேயே இருக்கலாம் என மருமகனிடம் கூறி உள்ளார். 
 
இதை நம்பிய ஆனந்தராஜ் துக்கம் விசாரித்து விட்டு மாமியார் வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அன்று இரவு அதே வீட்டில் மாமியாரும், மருகனும் தூங்கி கொண்டிருந்தனர். காலையில் ஆனந்தராஜ் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
 
இதனால் மோகனாம்பாள் தலைமறைவாகியுள்ளார். திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மோகனாம்பாளை தேடி வந்தனர். இதற்கிடையே இது தொடர்பாக மோகனாம்பாளின் கணவர் சந்தான கோபாலன் புதுக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
 
அவரிடம் நடத்திய விசாரணையில் மோகனாம்பாள் தான் கூலிப்படையை ஏவி ஆனந்தராஜை கொலை செய்தார் என்று தெரியவந்தது. கூலிப்படையாக செயல்பட்ட 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மோகனாம்பாளையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
அவரிடம் நடத்திய விசாரணையின்போது மோகனாம்பாள், “ஆனந்தராஜை எனக்குப் பிடிக்கவில்லை. எனவே அவனை தீர்த்து கட்டினேன்” என்று கூறியுள்ளார். இதற்கிடையே ஷர்மிளாவை கட்டாயப்படுத்தி மோகனாம்பாள் கருக்கலைப்பு செய்து விட்டதையும் அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.