வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 6 ஜனவரி 2016 (11:13 IST)

அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு இடத்திலும் பணம்... பணம்... பணம்... - விஜயகாந்த் குற்றச்சாட்டு

உள்ளே நுழைவது முதல் உரிய படுக்கை வசதி பெற்று, மருத்துவ பரிசோதனை செய்வது வரை ஒவ்வொரு இடத்திலும் பணம்... பணம்... பணம்... என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைப்பெற வந்தால், அங்கே அவர்கள் உயிரை இழக்கும் நிலைதான் ஏற்படுகிறது.
 
ஏற்கனவே அரசு மருத்துவமனைகளின் மீது பொதுமக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாத நிலையில், அவர்களின் இல்லாமையும், இயலாமையும், கஷ்டமான வாழ்க்கையும் வேறு வழியின்றி அரசு மருத்துமனையை நாடிச்செல்ல வேண்டிய நிலைக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி செல்பவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலைதான் தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ளது.
 
பல இடங்களில் உரிய சிகிச்சை அளிக்காததால் நோயாளி இறந்ததாக, இறந்தவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் அரசு மருத்துவமனையை முற்றுகையிடுவதும், மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்வதும், இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்வதும் தமிழகத்தில் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.
      
சென்னையைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து ஏழை, எளிய நோயாளிகள் மேல்சிகிச்சைகாக சென்னை ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குத்தான் வருகின்றனர். ஆனால் அங்கே அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது.
 
அங்கே சிகிச்சை பெற வருகைதரும் நோயாளிகள் உள்ளே நுழைவது முதல் உரிய படுக்கை வசதி பெற்று, மருத்துவ பரிசோதனை செய்வது வரை ஒவ்வொரு இடத்திலும் பணம்... பணம்... பணம்... என பிடுங்கப்பட்டு, லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறதென நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறுப்பாரேயானால், தனது அதிமுக கட்சிக்காரர்களை பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்வதற்காக, எப்படி உளவுத்துறையை பயன்படுத்தி அதை தெரிந்துகொள்கிறாரோ, அதேபோன்று இதையும் விசாரித்தால் உண்மை தெரியும். இவ்வளவு மோசமான நிர்வாகத்தில்தான் தமிழக சுகாதாரத்துறையும், அரசு மருத்துவமனைகளும் உள்ளது.
   
வாய்கிழிய பேசுவது மட்டுமே சுகாதாரத்துறை அமைச்சரின் வேலையாக உள்ளது. அவ்வப்போது சுகாதாரத்துறை செயலாளரை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்க செய்து, முதலமைச்சரும், சுகாதாரத்துறையின் அமைச்சரும் தப்பித்துக் கொள்கிறார்கள்.
 
நேற்று (04.01.2016) அதிகாலை சென்னை ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தால் யாரும் இறக்கவில்லை என்றும், எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை என்றும் கூறியிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திண்டிவனத்தை சேர்ந்த பாண்டுரங்கன், குன்றத்தூரை சேர்ந்த மன்னம்மாள், ஜோலார்பேட்டையை சேர்ந்த ராஜா ஆகிய மூவரும் தீவிபத்தினால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றம் சாட்டி, இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
 
ஆனால் அரசு அதை மூடிமறைக்க முயற்சி செய்கிறது. “முழுப்பூசணியை இலைச்சோற்றில் மறைக்கமுடியுமா?” பாதுகாப்புள்ள இடமாக இருக்கவேண்டிய அரசு மருத்துவமனையிலேயே தொடர்ந்து தீவிபத்து எற்படுகிறது. கடந்த ஆறு மாதம் முன்புகூட இதே பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும், அரசு மருத்துவமனை நிர்வாகமும்தான் இந்த தீவிபத்திற்கும், உயிரிழப்பிற்கும் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். மழை வெள்ள பாதிப்பின்போது சென்னை தனியார் மருத்துவமனையில் மின்தடையால் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை இந்த அரசு மூடிமறைத்தது.
 
அதுபோன்று இதையும் மறைக்காமல், அரசு மருத்துவமனையில் தீவிபத்தால் உயிரிழந்தவர்கள் ஏழை, எளிய மக்கள். எனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியும், அதில் கவனக்குறைவாக செயல்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.