1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 2 மே 2014 (16:21 IST)

மோடி பிரதமரானதும் தீவிரவாதத்தை ஒடுக்குவாராம் - இல.கணேசன் சொல்கிறார்

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான இல.கணசேன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
L.Ganesan - BJP
சென்னை சென்ட்ரலில் நேற்று வெடித்த 2 வெடிகுண்டு சம்பவத்தில் ஒரு பெண் பலியாகியுள்ளார். பலர் காயம் அடைந்துள்ளனர். இது இரக்கமற்ற ஒரு கோழை செயல்.
 
திருப்பதி, காளகஸ்தி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை குறி வைத்தோ அல்லது அவர் பேசும் கூட்டத்தில் பதற்றத்தை உருவாக்கவோ இந்த சம்பவத்தை நடத்தியிருக்கக் கூடும் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம்.
 
ஆந்திர எல்லையை அந்த ரயில் தொடும் சமயத்தில் இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தை அவர்கள் நிறைவேற்ற இருந்தனர். ஆனால், ரயில் காலதாமதமாக வந்ததால் சென்னை சென்ட்ரலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவுரவப் பிரச்சனை பார்க்கக் கூடாது. இது இருமாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. தேசிய புலனாய்வு குழு விசாரணைக்கு அவர் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியும். இதற்காக நாங்கள் அவரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
 
டி.ஜி.பி. ராமானுஜம் கூட இந்த வெடிகுண்டு தாக்குதல் தமிழகத்தை குறி வைத்து நடக்கவில்லை என்று கூறியுள்ளார். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் தேசப்பக்தர்களுக்கு நல்லது நடக்கும். துரோகிகளுக்கு கெடுதல் நடக்கும். அதனால்தான் அவர் பதவி ஏற்கக்கூடாது என இப்படி குண்டு வைக்கிறார்கள். ஆனால், மோடி பிரதமர் ஆவது உறுதி. மே 16 ஆம் தேதிக்கு பிறகு பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இரும்புக்கரம் கொண்டு பயங்கரவாதத்தை மோடி ஒடுக்குவார்.
 
திமுக தலைவர் கருணாநிதி பிடிப்பட்ட தீவிரவாதியிடம் தீவிர விசாரணை நடத்தியிருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் பயங்கரவாதிகள் இரட்டை கோபுர தாக்குதல் நடத்திய பிறகு அந்த நாட்டில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதால் அதன் பிறகு இதுபோன்ற சம்பவம் அங்கு நடக்கவில்லை.
 
ஆனால் இங்கு, எந்த சம்பவத்துக்கும் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். இது இனிமேலும் இருக்கக் கூடாது. பயங்கரவாதத்தை தீவிரவாதிகளை அழிக்க அனைவரும் ஒன்றுசேர வேண்டும். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.