வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (15:01 IST)

’மோடி பிரதமராக உதவிய அதானிக்கும் அம்பானிக்கும் விசுவாசமாக செயல்படுகிறார்’ - பொருளாதார அறிஞர் தாக்கு

தான் பிரதமராக உதவிய அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் விசுவாசமாக மோடி செயல்படுகிறார் என்று பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா பேசினார்.
 

 
திண்டுக்கல்லில் ஜி.கோபாலகிருஷ்ணனின் மணிவிழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெங்கடேஷ் ஆத்ரேயா, ”முதலாளிகள் மீது வரிபோட்டால் வரியை வசூல் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வரிச்சலுகைகள் செய்கிறது. பெரிய பெரிய நிறுவனங்களிடம் வரி வசூல்செய்ய வேண்டும்.
 
இதெல்லாம் செய்யாமல் நாடு முன்னேறும் என்பது வெறும் யூகமாகத்தான் இருக்கும். பலன் ஏதும் இருக்காது. முதலாளிகளுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் தரும் போது, அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை தருவதில் என்ன தவறு இருக்கிறது?
 
பாஜக அரசு முழுக்க முழுக்க பெருமுதலாளிகளுக்கு ஆதரவான ஒரு அரசாகவே உள்ளது. அதனால் அது தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்ட பார்க்கிறது.
 
இதன் மூலம் அந்நிய முதலீடுகள் வரும் என்று மோடி அரசு எதிர்பார்க்கிறது. பட்ஜெட்டில்கூட பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக திட்டங்கள் நிறைவேற்றப்படலாம். இந்திய முதலாளிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி வரிச்சலுகைகள் வழங்கும் மத்திய அரசு, சாதாரண விவசாயி வாங்கும் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் வீடு புகுந்து ஜப்தி நடவடிக்கை எடுக்கிறது.
 
ஆனால் பெருமுதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட கடனுக்காக எந்த நடவடிக்கையையும் எடுக்க மறுக்கிறது. அதானி, அம்பானி போன்றவர்கள் தான் மோடி வெற்றி பெற காரணமாக இருந்தவர்கள். அதனால் இந்த நாட்டை ஒட்டுமொத்தமாக சுரண்டுவதற்கு மோடி ஆதரவாக உள்ளார்.
 
ஏழை, எளிய மக்களுக்கு அவர் சேவையாற்றவில்லை. தன்னை வெற்றி பெற வைத்த அதானி, அம்பானி வகையறாக்களுக்கு விசுவாசமாக இருக்கிறார். பங்குச் சந்தையில் கம்பெனிகளின் பங்கு குறியீட்டு இலக்கை ரேட்டிங் ஏஜென்சிகள் தான் கூட்டுகின்றன. குறைக்கின்றன.
 
பங்கு சந்தையால் இந்தியாவிற்கு எந்தபயனும் இருக்கப் போவதில்லை. இதில் உற்பத்தி என்பது இல்லை. இது ஒரு சூதாட்டம் தான். சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே உலகமயத்தால் பயனடைந்து உள்ளனர்.
 
நாடு முழுவதும் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ரகுராம் ராஜன் போன்றவர்கள் தும்மினால் கூட அது பத்திரிகை செய்தியாக வெளிவருகிறது. ஆனால் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலைகள் பற்றி ஊடகங்கள் பெரிதாக கவலைப்பட்டதில்லை” என்று கூறியுள்ளார்.