அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க உரிமைகளை அதிமுக அரசு மத்திய அரசிடம் தாரை வார்த்ததாக வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நேற்று சட்டமன்ற கூட்டத்தில் டங்க்ஸ்டன் சுரங்க விவகாரம் விவாதத்திற்கு உள்ளானபோது அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான தம்பிதுரை, தான் மசோதாவை ஆதரித்ததாகவும், ஆனால் டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி!
பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது!
மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் திரு. தம்பிதுரை அவர்கள் மழுப்பி இருக்கிறார்.
அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது.
டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய
கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் திரு. தம்பிதுரை ஆதரித்தார்.
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.
அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.
திரு. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?
மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா?
இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K