வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 4 மே 2015 (20:19 IST)

அதிமுகவுக்கு இதுவே இறுதி ஆட்சி - மு.க.ஸ்டாலின்

அதிமுகவுக்கு இதுவே இறுதி ஆட்சி என்று கோவையில் 115 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து மு.க.ஸ்டாலின் பேசினார்.
 
கோவை மாநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் 63வது பிறந்த நாளையொட்டி 115 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோவை  சரவணம்பட்டியில் உள்ள எஸ்.எம்.எஸ். திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி எடுத்துக்கொடுத்து, திருமணத்தை நடத்திவைத்தார். அட்சதை தூவி ஆசி வழங்கினார். பாய், மெத்தை, தலையணை, கிரைண்டர், ஸ்டவ், சமையல் பாத்திரம் உள்ளிட்ட 63 வகையான சீர்வரிசை வழங்கினார். விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
 
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். அவரிடம் நான், தமிழக மக்களின் நலன் கருதி, 15 கேள்வி கேட்டு ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், அவரிடமிருந்து பதில் வரவில்லை. அவரால் பதில் எழுதவும் முடியாது. ‘முதல்வர்’ என கையெழுத்து போட்டு அவர் பதில் கடிதம் எழுதினால் அவ்வளவுதான். என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஓ.பி. என்றால் ‘அவுட் பேசன்ட்’ எனவும் ஒரு அர்த்தம் உண்டு. அந்த நோயாளி, மருத்துவமனைக்குள் செல்லாமல் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று செல்வார். அதுபோல்தான் ஓ.பன்னீர்செல்வத்தால் முதல்வர் அறைக்குள் செல்ல முடியவில்லை. முதல்வர் இருக்கையிலும் அமர  முடியவில்லை. தமிழகத்தில் எப்படி ஆட்சி நடக்கிறது என உங்கள் எல்லோருக்கும் தெரியும். 
 
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளிவர உள்ளது. அந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழகத்தில் பினாமி ஆட்சி நடக்கிறது. அதிமுக ஆட்சியில் இது 5 ஆவது ஆண்டு என்கிறார்கள். உண்மை அதுவல்ல, இது இறுதியாண்டு. அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. 
 
அதிமுக ஆட்சியின் அவல நிலையை எண்ணிப்பார்த்து, கடந்த காலங்களில் கருணாநிதி தலைமையில் நடந்த ஆட்சியின் நல்ல திட்டங்களை நினைவுகூர்ந்து, முடிவு எடுக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.     அதிமுகவின் அநியாய, அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.