வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2014 (09:50 IST)

மு.க. அழகிரிக்கு முன்ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தியது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மு.க.அழகிரிக்கு முன்ஜாமீன் நிபந்தனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தளர்த்தியது.
 
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்குச் சொந்தமான தயா பொறியியல் கல்லூரி, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் உள்ளது.
 
இந்தக் கல்லூரிக்கு இணைவிப்பு வழங்குவதில் பிரச்னை நீடித்து வந்தது. அண்மையில் இணைவிப்பு வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில், மு.க.அழகிரி மீது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நில அபகரிப்புப் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், மதுரை மாவட்ட மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மு.க.அழகிரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் அளித்தது.
 
மேலும், வழக்கை விசாரிக்கும் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்தது.
 
இதன்பேரில், மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மு.க.அழகிரி ஆஜராகி ஜாமீன் பெற்றார். மேலும், உயர் நீதிமன்ற நிபந்தனையின் பேரில், மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவில் கையெழுத்திட்டு வந்தார்.
 
இந்நிலையில், முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி அழகிரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், முன்ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தி உத்தரவிட்டார்.
 
ஆனால், காவல் துறையினர் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.