வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 1 செப்டம்பர் 2014 (08:43 IST)

விஜயகாந்தை சந்தித்தார் மு.க.அழகிரியின் ஆதரவாளரான நடிகர் நெப்போலியன்

அமெரிக்காவில் இருந்து திருப்பிய, மு.க.அழகிரியின் ஆதரவாளரான நடிகர் நெப்போலியன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை திடீரென சந்தித்துப் பேசினார்.

திமுக தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், முன்னாள் மத்திய மந்திரியுமாக இருந்த மு.க.அழகிரி, கட்சியின் தலைமை பற்றி அதிருப்தியான கருத்துக்களைத் தெரிவித்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தனது பிறந்தநாளை மதுரையில் மு.க.அழகிரி கொண்டாடினார். திமுக வில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்ததால், கட்சி நிர்வாகிகள் யாரும் அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்போது எம்.பி.க்களாக இருந்த நடிகர் நெப்போலியன், நடிகர் ரித்தீஷ் மற்றும் கே.பி.ராமலிங்கம் ஆகியோர், பிறந்த நாள் விழாவில் பங்கேற்று மு.க.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால், மு.க.அழகிரியின் ஆதரவாளர்களாக அவர்கள் இருந்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கேயே வசித்து வந்தார். நடிகர் ரித்தீஷ் சமீபத்தில் அதிமுக வில் சேர்ந்துவிட்டார்.

அமெரிக்காவில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரும்பிய நடிகர் நெப்போலியன் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தேமுதிக பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோரும், நெப்போலியனுடன் வந்த 10 பேரும் உடன் இருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நெப்போலியன், அவரது உடல் நிலை குறித்தும் கேட்டறிந்ததாகவும், தமிழக அரசியல் நிலைமை குறித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.