வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 22 டிசம்பர் 2014 (08:20 IST)

என்னை வாழ்த்தி ஆசீர்வதித்தார் மு.க.அழகிரி: பாஜகவில் இணைந்த நெப்போலியன் தகவல்

மு.க. அழகிரி என்னை வாழ்த்தி ஆசீர்வதித்தார் என்று பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் கூறியுள்ளார்.
 
நடிகர் நெப்போலியன், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
 
இது குறித்து நெப்போலியன் செய்தியாளர்களிடம் கூறியது:-
 
16 வயதிலிருந்து கடந்த 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய இணை அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காக நேர்மையாக உழைத்திருக்கிறேன்.
 
ஒவ்வொரு தேர்தலிலும் திமுக தலைமையின் உத்தரவை ஏற்று தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து அக்கட்சிக்காக வாக்குகளைச் சேர்த்துள்ளேன். ஆனால், இப்போது திமுகவில் ஜனநாயகம் இல்லை. தலைவரின் பேச்சுக்கே அக்கட்சியில் மதிப்பில்லை.
 
இதனால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கொந்தளித்துப் போய் உள்ளனர். யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற நிலையில் நான் அதனைத் தொடங்கியுள்ளேன். இன்னும் பலர் திமுகவில் இருந்து விலகுவார்கள்.
 
பிரதமர் மோடி, சீனா, ஜப்பான் போல இந்தியாவையும் வளர்ச்சி அடைந்த நாடாக்க கடுமையாக உழைத்து வருகிறார். அமெரிக்காவில் மோடியை வரவேற்க 50,000 பேர் திரண்டனர்.
 
ஒரு நாட்டின் தலைவருக்கு வெளிநாட்டில் இவ்வளவு கூட்டம் திரண்டது இதுவரை நடக்காதது. இதனை நேரில் கண்டு வியந்தேன்.
 
எனவே, மோடியின் அழைப்பை ஏற்று அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளேன். இது குறித்து மு.க. அழகிரியிடம் பேசினேன். ‘சந்தோஷமாக போய் வா' என என்னை வாழ்த்தி ஆசீர்வதித்தார். நானும், எனது ரசிகர் மன்ற உறுப்பினர்களும் பாஜகவின் வளர்சிக்காகப் பாடுபடுவோம். இவ்வாறு கூறினார் நெப்போலியன்.
 
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் நெருங்கிய உறவினருமான நடிகர் நெப்போலியன் திமுகவில் முக்கியப் பிரமுகராக இருந்தவர்.
 
திமுக சார்பில் 2001ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் தோல்வி அடைந்த அவர், 2009 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்ற அவர் மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சராகப் பதவிவகித்தார்.
 
பின்னர் கே.என். நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மு.க. அழகிரியின் ஆதரவாளராக மாறியதால், நெப்போலியனுக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.