வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (12:49 IST)

மு.க. அழகிரி பிரச்சினையில் விரைவில் தீர்வு ஏற்படும் - கே.பி. ராமலிங்கம்

மு.க. அழகிரி விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருபவர் கே.பி.ராமலிங்கம். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆவார். திமுக வில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவாக வெளிப் படையாக பேட்டி அளித்தார்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிட்ட 35 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கான காரணத்தை ஆராய கடந்த ஜூன் 2 ஆம் தேதி திமுக வின் உயர்நிலை குழு கூடியது.

தோல்விக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி ஜூலை 22 ஆம் தேதி கே.பி.ராமலிங்கம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம், தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் முல்லை வேந்தன், தர்மபுரி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் உள்பட 33 திமுக நிர்வாகிகள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். முல்லை வேந்தன் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

பழனி மாணிக்கம், இன்பசேகரன் உள்ளிட்டோர் அடிப்படை உறுப்பினர் பதவியில் நீடிப்பர் என்று திமுக தலைமை கூறியது. ஆனால் கே.பி.ராமலிங்கம் தொடர்பாக எந்தவித கருத்தையும் திமுக தலைமை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்தில் கே.பி.ராமலிங்கம் சந்தித்துப் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். அழகிரி குறித்தே அவர்கள் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கே.பி.ராமலிங்கம் கூறியதாவது:–

“தந்தையும், மகனும் சந்தித்துக் கொள்வது போன்ற பாச சந்திப்பாகத்தான் அது இருந்தது. என்னிடம் எதுவும் அவர் கடுமையாக பேசவில்லை. சுமார் 1 மணி நேரத்துக்கு மேல அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

டெல்லி அரசியல் விவகாரம் உள்பட அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பேசினோம். மு.க.அழகிரி விவகாரம் தொடர்பாகவும் பேசினோம். கருணாநிதியுடனான சந்திப்புக்கு பிறகு அழகிரி விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தமிழுக்காகக் குரல் கொடுத்து வருவதற்கு கருணாநிதி என் மூலம் பாராட்டு தெரிவிக்கச் சொல்லி இருந்தார்.

அவருக்குத் தமிழகத்தில் தமிழ் அறிஞர்களை வைத்து ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் என்னிடம் கூறினார். விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன்“. இவ்வாறு கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.