வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:41 IST)

முன்பு ஆதரவு; இப்போது எதிர்ப்பு- தீபா வீட்டின் முன் குவியும் தொண்டர்கள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தான் அவரது அண்ணன் மகள் தீபா வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சி தொண்டர்கள் தீபாவை ஆதரித்தனர். தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்கள் குவிந்து அரசியலுக்கு வருமாறு கோரிக்கைகளை எழுப்பினர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். பேரவைக்கான கொடியையும் அறிமுகம் செய்தார். மேலும் நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார்.  நிர்வாகிகள் பட்டியல் வெளியீட்டிற்கு பின் தீபாவின் செல்வாக்கு சரிவை நோக்கி செல்வதாகவே தெரிகிறது. காரணம் நிர்வாகிகள் பட்டியலில் அவருக்கு வேண்டப்பட்டவர்களே தேர்வு செய்யப்படுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தீபா வீட்டிற்கு வரும் தொண்டர்கள் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.


 

இந்த சூழ்நிலையில் நிர்வாகிகள் பட்டியல் விவகாரத்தில் தீபாவிற்கும் அவரது கணவருக்கும் மோதல் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை மாதவன் மறுத்தார். எங்களுக்குள் எந்த பிரசனையும் இல்லை என்றும்,தீபாவே பேரவை குறித்து நல்ல முடிவுகளை எடுப்பதால் நான் தலையிடவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் தி.நகரில் உள்ள தீபா வீட்டை முற்றுகையிட்டு, திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜாகீர் உசேன் தலைமையில் ஆதரவாளர்கள் பலர்  நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா கணவர் மாதவன் போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதானம் பேசினார். ஆனாலும் அதனை ஜாகீர் உசேன் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.


இது குறித்து ஜாகீர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீபா வெளியிட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் உண்மையாக உழைத்த எங்கள் பெயர் இல்லை. இதனால்  நாங்கள் மிகவும் வேதனை அடைந்தோம். உண்மையான விசுவாசிகளை பேரவை நிர்வாகிகளை நியமிக்கவேண்டும் என்று கூறினார்.

பேரவை துவக்குவதற்கு முன் தீபா இல்லத்தில் ஆதரவு தெரிவித்து தொண்டர்கள் குவிந்துவந்தனர். ஆனால் தற்போது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே தொண்டர்கள் தீபா இல்லத்திற்கு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.