வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2015 (18:08 IST)

மெட்ரோ ரயிலை கொண்டு வந்தது பாமக தான்: பகீர் கிளப்பும் ஜி.கே.மணி

மெட்ரோ ரயில் துவங்கப்பட்டது தங்களால் தான் என திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே போட்டிபோட்டு கூறிவரும் நிலையில், 'மெட்ரோ ரயில் துவங்கப்பட்டது பாமக -வுக்கு கிடைத்த வெற்றி' என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பகீர் கிளப்பும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி, பாமக சார்பில் மண்டல அளவிலான மாநாடுகள் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளாது. அதன்படி மேற்கு மண்டல மாநாடு கோவையில் வரும் 12 ஆம் தேதி நடக்கிறது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டுக்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.
 
இந்நிலையில், மாநாடு நடக்கும் இடத்தில் பூமி பூஜை நிகழ்வு இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகம் முழுவதும் கட்சியை பலப்படுத்தும் வகையில் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவையில் வரும் 12 ஆம் தேதி மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு, தமிழகத்தில் அரசியல் திருப்புமுனை மாநாடாக இருக்கும்.
 
சென்னை மெட்ரோ ரயில் துவங்கப்பட்டது என்பது பாமக -வுக்கு கிடைத்த வெற்றி. சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் தான் சென்னை போக்குவரத்து பிரச்சனையை தீர்க்கும் எனச்சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மெட்ரோ ரயிலை கொண்டு வந்தது பாமக தான்.
 
மெட்ரோ ரயிலில் தற்போது நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் கூடுதலாக உள்ளது. ஏழை எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் பயண்படுத்தும் விதமாக மெட்ரோ ரயிலின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். அதேபோல் சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மெட்ரோ இரயில் திட்டததை விரிவு படுத்தவேண்டும். சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களிலும் மெட்ரோ ரயிலை கொண்டு வர வேண்டும்'' என்றார்.