வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (15:32 IST)

பறக்கும் ரயிலுடன் மெட்ரோ ரயில் திட்டத்தை இணைக்க வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

மெட்ரோ ரயில் திட்டத்தை பறக்கும் ரயிலுடன் இணைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 
 இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் நடைபெறும் திட்டம் என்பதால் மக்கள் மத்தியில் புதிய உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.
 
இந்த ரயில் சேவை சென்னை மாநகர மக்களுக்கு ஓர் நல்ல செய்தி. முதல் கட்டப்பணிகள் முடிவடைந்து ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் அதனைத் தொடர்ந்து அடுத்தக் கட்டப் பணிகள் விரைவாக முடிக்கப்பெற்றால் இதன் பயனை 100 சதவீதம் பெறலாம்.
 
சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் 10 கி.மீ தூரத்திற்கு ரூபாய். 40 என்பது மிக அதிகம் என மெட்ரோ ரெயில் பயணிகள் உட்பட பொதுமக்கள் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
 
பிற பெரு நகரங்களில் ஓடும் மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணத்தை விட சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த மக்களின் எண்ணமாக இருக்கின்றது.
 
மெட்ரோ ரயிலில் நடுத்தர மக்கள், அமைப்புச் சாரா தொழில் துறையை சேர்ந்தவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் அதிக அளவில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
 
மெட்ரோ ரயில் திட்டத்தை (சிஎம்ஆர்எல்) பறக்கும் ரயில் திட்டத்துடன் (எம்ஆர்டிஎஸ்) இணைப்பதை விரைவுப்படுத்தி சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் விரைந்து முடித்திட வேண்டும்.
 
மேலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவு படுத்தி, அதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் விளம்பரம் செய்வதன் மூலமும் வருமானத்தை பெருக்கலாம். இதன் மூலம் மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணத்தை குறைக்க அனைத்து முயற்சிகளையும் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
 
தமிழக அரசு மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்துவதற்கும், பயணிகள் கட்டணத்தை குறைப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.