1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2015 (20:11 IST)

மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிப்பது தமிழக அரசு அல்ல: ஜெயலலிதா விளக்கம்!

மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிப்பது  தமிழக அரசு அல்ல; கட்டணங்களை நிர்ணயிப்பது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்தான் என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
 

 
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
 
திமுக தலைவர் கருணாநிதியும், திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் சென்னை மெட்ரோ ரயில் திட்டமே முந்தைய திமுக அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் என்றும், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு காலதாமதம் ஏற்படுத்தியது என்றும் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2003ல் மேற்கொள்ளப்பட்டு, இந்த ஆய்வின் அடிப்படையில்தான், வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித்தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் - பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித்தடம் என இரு வழித்தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 
2006ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சி அமைக்கப்பட்டதும், 24.6.2006 அன்று சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ஆற்றிய உரையிலேயே, சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டிய காலத்திற்குள் செயல்படுத்த இயலாமல் அதன் காரணமாக திட்ட செலவு அதிகரித்துள்ளது.
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய உத்தேச மதிப்பு 20,000 கோடி ரூபாயாகும். எனவே, இந்த திட்டத்திற்கு தமிழக அரசு மேலும் பல ஆயிரம் கோடி ரூபாயை கூடுதலாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு திட்டம் எனது ஆட்சியில் நிறைவேற போகிறது என்றால், அந்த திட்டம் நிறைவேறுவதற்கு, தான்தான் காரணம் என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில், உடனே அந்த பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவதையும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.
 
கடந்த 30 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி, மெட்ரோ ரயில் தொடங்குவதை தள்ளிக்கொண்டே போனால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு செய்ததற்கு பிறகு, வேறு வழியில்லாமல் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
டெல்லி மெட்ரோ ரயில் கட்டணத்தை விட, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் 250 சதவீத அளவு அதிகம் என்றும், தமிழக அரசும் மெட்ரோ நிறுவனமும் இணைந்து, மக்களின் செலவிடும் சக்தியை அறிந்து, மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் உபதேசம் வழங்கியுள்ளார் கருணாநிதி.
 
சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிப்பது தமிழக அரசு அல்ல. இதனை நிர்ணயிப்பது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்தான். முதன் முறை அந்த நிறுவனம்தான் கட்டணத்தை  நிர்ணயிக்க வேண்டும் என்றும், முதல் முறைக்கு பின்னர் கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம், சட்டப்படியாக ஏற்பாடு செய்யப்படும் ஒரு அமைப்பிடம் இருக்க வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட ஒப்புதல் அளித்தவரே கருணாநிதிதான்.
 
சென்னை மெட்ரோ ரயில் கட்டண விகிதம், மும்பை மெட்ரோ ரயில் கட்டண விகிதத்தை போன்றே அமைந்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் தனது கட்டணத்தை விரைவில் உயர்த்த உத்தேசித்துள்ளது என்பதையும் கருணாநிதிக்கு தெரிவித்து கொள்கிறேன். அவ்வாறு உயர்த்தப்பட உள்ள அந்த கட்டணமும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டணத்தை ஒட்டியே இருக்கும். செலவுகளுக்கு ஏற்ப கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதை ஒரு தன்னிச்சையான அமைப்பு நிர்ணயம் செய்திட வேண்டும் என்பதோடு, அந்த அமைப்பே மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற ஷரத்து அடங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியது கருணாநிதிதான்.
 
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.