வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (00:35 IST)

மீத்தேன் ஆய்வு செய்யவில்லை: ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் ஆய்வு செய்யவில்லை என ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, ஓ.என்.ஜி.சி துணை பொது மேலாளர் சி.என்.எஸ். குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- 
 
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருக்கண்ணமங்கை, அம்மையப்பன், கொரடாச்சேரி, முகுந்தனுர், மணக்கால் அய்யம்பேட்டை, சிறீவாஞ்சியம் மற்றும் நன்னிலம் ஆகிய பகுதியில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் புவியியல் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
 
ஆனால், இதைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, மீத்தேன் எரிவாயு எடுப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பல்வேறுபகுதியில் பொதுமக்கள் ஆய்வுப் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த ஆய்வு குறித்துப் பொது மக்களிடத்தில் சந்தேகம் மற்றும் தவறான செய்திகள் பரவி வருகிறது.
 
மேலும், பூமியில் இருந்து 25 முதல் 30 மீட்டர் வரை தோண்டி குறைந்த அளவிலான வெடி மருந்துகளைப் பள்ளத்தில் இடுகிறோம். மிகவும் கவனமாக இந்த வெடி மருந்துகள் வெடிக்கப்பட்டுகிறது. இதன் மூலம் மிகவும் லேசான அதிர்வுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்வுகள் பூமியில் மேற்பரப்பில் உள்ள ஜியோ போன் சென்சார்களால் கணக்கிடப்படும். அதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கணினி மூலம் ஆய்வு செய்து பூமிக்கடியில் எண்ணெய் கிடைக்கும் இடங்களுக்கான வரை படம் தயாரிக்கப்படுகிறது.
 
ஆனால், மீத்தேன் குறித்த எந்தவித ஆய்வுப் பணிகளும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ செய்யவில்லை. இந்த ஆய்வுப்பணிகள் எல்லாம் மத்திய, மாநில அரசுகள் மூலம் உரிய அனுமதியும் உரிமமும் பெற்றுத்தான் நடத்தப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த 1959ஆம் ஆண்டில் இருந்து நாட்டின் பல் வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி., நிர்வாகம் புவியியல் நிர்வாகம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் 35 ஆய்வு களில் எண் ணெய், இயற்கை எரிவாயு கிணறுகள் கண்டறியப்பட்டு, தினசரி 700 டன் கச்சா எண்ணெய், 3.8 மில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு கடந்த நிதியாண் டில் ரூ.300 கோடி ராயல்டி யாகவும், 110 கோடி ரூபாய் வரியாகவும் செலுத்தியுள்ளோம்.
 
எங்கள் நிர்வாகத்தின் அனைத்து ஆய்வுகள், உலகச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்துச் செயல்படுத்தி வருகின்றோம். எனவே, பொது மக்கள் விவசாயிகள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.