1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2015 (11:22 IST)

பாதரச கழிவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரகாஷ் ஜவடேகருக்கு கனிமொழி கடிதம்

கொடைக்கானல் பகுதியில், பாதரச கழிவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கனிமொழி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில் கனிமொழி கூறியிருப்பதாவது:–
 
யுனிலிவர் கம்பெனி பாதரசக் கழிவுகளைக் கொட்டியதால் ஏற்பட்ட மாசினால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல்–பம்பார் சோலை பகுதியைத் தூய்மைப்படுத்த கடந்த பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அமைப்புகள் போராடி வருகின்றன. சமீபத்தில் இப்பிரச்சினை மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது. பொதுமக்கள் உணர்வுகளை அடுத்து யுனிலிவர் கம்பெனியின் தலைமை நிர்வாக அலுவலர் பால் போல்மன் பாதிக்கப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இந்த மாசு கண்டுபிடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. 2015 ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தாவரங்களிலும் பம்பார் சோலையில் எடுக்கப்பட்ட மண்ணிலும் அதிக அளவு பாதரசக் கழிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. யுனிலிவரின் மாசுபடிந்த பகுதி சுற்றியுள்ள இடங்களுக்கும், பம்பார் சோலை மற்றும் பம்பார் நதி ஆகியவற்றில் பாதரசக் கழிவுகளை கசிய விடுவது உறுதி செய்யப்பட்டது.
 
பம்பார் நதி பெரிய குளத்தைத் தாண்டி வைகை அணையில் சேர்கிறது. இதனால் மீன் வளத்திலும் பாதரசக் கழிவுகளால் மாசு ஏற்பட்டு மீன் உண்பவர்கள் பாதிக்கப்படுவர். ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மண் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றிற்கும் இழப்பீடு வழங்க மாசுபடுத்தும் நிறுவனத்துக்கு பொறுப்பு உண்டு என்று தெளிவாக வரையறுத்துள்ளது. மேலும் அரசியல் சட்டம் 21 ஆவது பிரிவு தூய்மையான சுற்றுச்சூழல் உரிமையை அளிக்கிறது.
 
சுற்றுச்சூழலுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொழிற்சாலைகள் பொறுப்பு என்றும் சமீபத்திய பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாகியுள்ளன. இந்நிலையில் உடனடியாக உயர்ந்தபட்ச சர்வதேச தரங்களில் மண்ணை தூய்மைப்படுத்தும் பணியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள உத்தரவிடும்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தாங்கள் உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
 
எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றுவதற்கு முறையான செயல்முறையை உருவாக்கி, மீண்டும் கொடைக்கானல் போன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதை தங்களது அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கனிமொழி கூறியுள்ளார்.