1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (20:04 IST)

60 ஆயிரம் கூட்டுறவுப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிப்பு

அரசு ஊழியர்களுக்காக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் 60,000 பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 1ஆம் தேதி அவர் அறிவித்ததாவது:
 
“தனி மனிதனுக்காகச் சமூகமும், சமூகத்திற்காகத் தனி மனிதனும்” என்ற கூட்டுறவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கூட்டுறவு இயக்கங்களை வலுப்படுத்துவதிலும், முன்னேற்றம் அடையச் செய்வதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 
 
மக்கள் நலத் திட்டங்களைச் செவ்வனே செயல்படுத்தி வரும் கூட்டுறவு இயக்கங்களை மேலும் மேம்படுத்தும் வகையில் கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 
 
1. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காகப் பணியாற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும், கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கங்கள் ஆகியவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களில் பணியாற்றும் சுமார் 60,000 பணியாளர்கள், தங்களுக்கு இது நாள் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அதாவது Health Insurance Scheme ஏதும் செயல்படுத்தப்படவில்லை எனவும், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற ஒன்றினைத் தங்களுக்கும் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
இவர்களின் கோரிக்கையினை ஏற்று, அரசு ஊழியர்களுக்காக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் 60,000 பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்திற்கென ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய காப்பீட்டுக் கட்டணமான 12 கோடியே 54 லட்சம் ரூபாயினை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் சரி சமமாக ஏற்றுக் கொள்வார்கள். 
 
2. தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் அமைப்பின் அடித்தளமாக 4530 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பயிர்க் கடன், நகைக் கடன், வைப்பு நிதி திரட்டுதல், பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகம் செய்திடும் நியாய விலைக் கடைகளை திறம்பட நடத்துதல் உள்பட பல்வேறு இன்றியமையாப் பணிகளை செய்து வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை நவீனப்படுத்திட வேண்டியது அவசியமாகிறது. பிற வங்கிகளில் உள்ளது போல், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் முகப்புத் தோற்றத்தை பொலிவூட்டுதல், நவீன வங்கிக் கூடங்கள் அமைத்தல், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்துதல், வாடிக்கையாளர்களுக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அதன் மூலம் பொது மக்களிடமிருந்து அதிக அளவில் வைப்பு நிதியினைத் திரட்டும் வகையில் 100 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் 2014-15ஆம் ஆண்டில் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயம் ஆக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
3. மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்காக, 1977ஆம் ஆண்டு, பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் துவங்கப்பட்டன. இச்சங்கங்கள் மலைவாழ் மக்களுக்கு கடன் வழங்குதல், இடு பொருட்கள் வழங்குதல், விவசாய விளைப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டம் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டிலுள்ள 19 பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் தற்போது 96,332 பழங்குடியினரும், 17,477 பழங்குடியினர் அல்லாதோரும் உறுப்பினர்களாக உள்ளனர். பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் மலைவாழ் பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான தேன், சாமை, வரகு, மற்றும் புளி ஆகியவற்றைக் கொள்முதல் செய்து, அவற்றிற்குப் பொதுவான வணிக முத்திரையிட்டு, அவர்களின் வருமானத்தை, அதிகரிக்கச் செய்யும் வகையில் விற்பனை செய்யும் திட்டம் 2013-14ஆம் ஆண்டு முதல் துவக்கப்பட்டு, இத்திட்டத்தில், 30.6.2014 வரை 21 லட்சத்து 70 ஆயிரத்து 169 ரூபாய் மதிப்பிலான தேன், சாமை, புளி மற்றும் வரகு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், பந்தலூர் வட்டத்தில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாலும், கோத்தகிரி வட்டம் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாலும், பந்தலூர் வட்டத்தில் உள்ள எருமாடு மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 3,032 தொல் பழங்குடியின குடும்பங்களும், கோத்தகிரி வட்டத்திலுள்ள 65 கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 6,272 பழங்குடியினக் குடும்பங்களும், சங்கத்தின் சேவையைப் பெற முடியவில்லை. இதே போன்று தருமபுரி மாவட்டத்தில், சித்தேரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சித்தேரி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் செயல் எல்லையில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் சார்ந்த 5 வருவாய் கிராமங்களும், 37 குக்கிராமங்களும், அரூர் வட்டத்தைச் சார்ந்த 15 வருவாய் கிராமங்களும், 19 குக்கிராமங்களும் உள்ளன. இங்குள்ள 2,341 மலைவாழ் குடும்பங்கள் சித்தேரி செல்ல 75 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. 
 
பழங்குடியின மக்களுக்குத் தேவையான இடுபொருட்கள் மற்றும் இதர சேவைகள் அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே கிடைத்திடும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வட்ட தொல்பழங்குடியினர் பெரும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், கோத்தகிரி வட்ட மலைவாழ் பழங்குடியினர் பெரும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம்; மற்றும் தருமபுரி மாவட்டத்தில், சிட்டிலிங்கி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகிய புதிய 3 மலைவாழ் பழங்குடியினர் பெரும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், கூட்டுறவு அமைப்புகளின் சேவைகள் எளிதில் மக்களுக்கு கிடைக்கவும், கூட்டுறவுப் பணியாளர்களின் வாழ்வு மேம்பாடு அடையவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.