வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (18:31 IST)

மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.229.46 கோடி என்னாச்சு? தம்பித்துரைக்கு எதிராக போராட முடிவு

கரூர்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்ட, 229.46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அரசியல் காரணங்களால் முழுக்க, முழுக்க அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையின் சதியால் தான் அப் பணிகள் ஏதும் துவங்கப்படவில்லை. இதனால் அந்த நிதியை திருப்பி அனுப்ப வேண்டிய பரிதாபம் ஏற்பட்டுள்ளதாக கூறி, உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு அறப்போராட்டங்களில் ஈடுபட ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் முடிவெடுத்துள்ளனர்.
 

 

'கடந்த, 2014ல், 150 மாணவர்கள் சேர்க்கையுடன், கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கப்படும்' என, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  இதையடுத்து, வாங்கல் அடுத்த, குப்பிச்சிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான, 25.63 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டது. தொடர்ந்து, 2015 அக்டோபரில், புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க, 229.46 கோடி ரூபாய் ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டது. திடீரென, கரூர் நகராட்சிக்கு சொந்தமான சணப்பிரட்டியில், மருத்துவக்கல்லூரி கட்ட திட்டமிட்டு, 2016, மார்ச், 1ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை துவக்கி வைத்தார்.

ஆனால், இங்கு, 16.49 ஏக்கர் நிலம் மட்டுமே, எவ்வித பயன்பாட்டுக்கும் உட்படுத்தப்படாமல் இருந்தது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, மருத்துவக் கல்லூரி அமைக்க, 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப, தமிழக சுகாதார துறைக்கு கடிதம் அனுப்பியது. மூன்று ஏக்கர் நிலம் பற்றாக்குறை, இடம் தேர்வில் குளறுபடி, அரசியல் குழப்பங்கள், நீயா நானா ஈகோ பிரச்னை போன்ற காரணங்களால், ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காங்., முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன்: வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் மருத்துவமனை கட்ட ஏற்பாடுகள் நடந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கொண்டு வந்த திட்டம் என்ற ஒரு காரணத்தினால், அ.தி.மு.க கொள்கைபரப்பு செயலாளரும், மக்களவை  துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இடையே இருந்த போட்டி மனப்பான்மையால், அரசாணை வெளியிடுவது நிறுத்தப்பட்டது.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் போதுமான இடவசதியில்லை. மேலும், இரண்டு நிதியாண்டுகளாக ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமல் இருப்பதால், 229.16 கோடி ரூபாய் நிதியை, அரசே திரும்ப எடுத்து கொள்ள வாய்ப்புள்ளது. கடந்த, 1964ல் நகராட்சி சார்பில், சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கு வாங்கப்பட்ட இடத்தில், மருத்துவக் கல்லூரி, பூங்கா என்று அமைக்கப்படுகிறது. இந்த இடத்தை தவிர்த்து வேறு பகுதியை தேர்வு செய்ய வேண்டும். 

 அரசு மருத்துவக் கல்லூரி, மண்மங்கலம் மேம்பாலம், ரிங் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் போன்ற பல்வேறு பணிகள், அ.தி.மு.க.,வின் உட்கட்சி பிரச்னையால் கிடப்பில் உள்ளன. ஆளுங்கட்சி அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த திட்டத்தை, மற்றொருவர் அமைச்சராக வந்த பின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன. உட்கட்சி பிரச்னையில், பொதுமக்கள் நலன் சார்ந்த விசயங்களில், அரசியல் செய்வதை தவிர்த்துவிட்டு, மருத்துவக் கல்லூரி கட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அமைச்சர், லோக்சபா துணை சபாநாயகர் என, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளை அடைவதற்கு, கரூர் மாவட்ட மக்கள் காரணமாக அமைத்துள்ளனர். ஆனால், அவர்களின் எண்ண ஓட்டப்படி, கல்லூரிக்கு இடம் தேர்வு செய்ய வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வந்தால், வேறு மாவட்டத்திற்கு, கல்லூரி இடம்பெயர்ந்து விட வாய்ப்புள்ளது. 

கரூர் மாவட்டத்தோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டையில், மருத்துக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆனால், கரூரில் பணிகள் துவங்கவில்லை. இதனால், கரூர் மாவட்ட மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் இடம் தேர்வு செய்யப்பட்ட வாங்கல் குப்புச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புக்கு பின், வாங்கலில் மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், கரூர் நகருக்கு இடத்தை மாற்றிவிட்டனர். இதனால், வாங்கல் உள்ளிட்ட கிராமப்பகுதிகளின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. இதை வலியுறுத்தி வரும், 20ல், அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து, கரூர் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்.  புதுக்கோட்டைக்கும், கரூருக்கும் ஒன்றாக மருத்துவக் கல்லூரியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், புதுக்கோட்டையில் மருத்துவகல்லூரி செயல்படுகிறது. கரூரில், நடைமுறைக்கு வரவில்லை. பொதுமக்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்போம் என்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, வருவாய்த்துறை சார்பில், கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில், சணப்பிரட்டியில், 20 ஏக்கர் நிலம் ஒப்படைக்கும் நடவடிக்கை, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மருத்துவக் கல்லூரி பணிகள் துவங்கும். மேலும், அரசு ஒதுக்கீடு செய்த நிதியை திரும்ப பெறுவது வழக்கமான நடைமுறை தான். கட்டுமான பணிகள் துவங்கும் போது, அந்த நிதியை அரசிடமிருந்து பெற்று விடலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

-கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்