வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.vadivel
Last Updated : சனி, 23 மே 2015 (10:59 IST)

ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மதிமுக தொண்டர் கட்சியிலிருந்து நீக்கம் - வைகோ அதிரடி

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மதிமுக தொண்டரை, அக்கட்சியிலிருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக நீக்கியுள்ளார். 
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக 5 வது முறையாக பதவியேற்கிறார். இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்  இன்று காலை 11 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றுகிறது.
 
சென்னை, எழும்பூர் ரெயில் நிலைய காவல்நிலைய உதவி மையத்துக்கு வந்த ஒரு  தொலைபேசி அழைப்பில், சென்னையில் சனிக்கிழமை வெடிகுண்டுகள் வெடிக்கும் என ஒரு நபர்  மிரட்டல் விடுத்தார்.
 
இதனால், அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, போனில் பேசியவர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
 
இதில், நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பட்டாரியர் தெருவைச் சேர்ந்த சிவகுமார் (42)  செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தை கண்டுபிடித்தனர்.
 
உடனே, கோட்டார் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையிலான காவலர்கள் சிவகுமாரை தேடி அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து, அங்கு சென்று அவரை மடக்கிய காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிவகுமார் நாகர்கோவிலில் வீடியோகிராபராக வேலை பார்ப்பதும், குடிபோதையில் தனது செல்போனில், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை கண்டு பிடித்தனர். சிவகுமார்  மதிமுக கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
 
இதனையடுத்து, சிவகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர். மிரட்டலுக்கு அவர் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மதிமுக தொண்டர் சிவக்குமாரை அக்கட்சியிலிருந்து நீக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.