வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2015 (00:48 IST)

இன்று காந்திய வழியில் போராட்டம் - நாளை பகத்சிங் வழியில் போராட்டம்: வைகோ தகவல்

தமிழகத்தில், மதுவிலக்கு எதிராக இன்று காந்திய வழியில் போராட்டம் நடைபெற்றுள்ளது. நாளை பகத்சிங் வழியில் போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

 
நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ வீட்டிற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு சென்றார். அங்கு வைகோவின் தாயார் மாரியம்மாள், மற்றும் மதுக்கடை போராட்டத்தில் காயம் அடைந்த வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரிடம் நலம் விசாரித்தார்.
 
அப்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் ஒருவர், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் புகையிலை கம்பெனி நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
 
ஆம், கடந்த 2000ம் ஆண்டு முதல் எனது மகன் புகையிலை கம்பெனி ஏஜென்சி நடத்தி வருகிறார். ஆனால், அந்தக் கம்பெனியின் உரிமையாளராக நான் இல்லை. எனது மகன் தான் அதில் ஈடுபட்டுள்ளார். நான் பினாமி பெயரில் எந்தத் தொழிலும் செய்யவில்லை. செய்யவும் விரும்பவில்லை.
 
சிகரெட்டை தமிழக அரசு தடை செய்தால், எனது மகன் நடத்தி வரும் புகையிலை கம்பெனியை உடனே மூடதயாராக உள்ளோம்.
 
மது ஒழிப்புக்கு ஆதரவாக நடந்து வரும் மாணவர் போராட்டத்தைத் தமிழக அரசு ஒடுக்க நினைப்பது தவறான செயல். டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி காந்திய வழியில் தற்போது போராடி வருகிறோம்.
 
திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் பங்கேற்காத நிலையில்கூட, இன்று நடைபெற்ற போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட மறுத்தால் பகத்சிங் வழியில் போராடுவோம் என்றார்.