1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 25 நவம்பர் 2014 (18:50 IST)

மேயர் சைதை துரைசாமி அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார்; அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எதிரொலி!

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டது உறுதியாகி உள்ளது.
 
அரசு நிகழ்ச்சியில் அமைச்சர்களுடன் பங்கேற்ற படத்தில் இருந்து அவரது படம் மட்டும் வெட்டி நீக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் சென்னையில் பெய்த மழை காரணமாக, பல இடங்களில் புதிதாக போட்ட சாலைகளே காணாமல் போனது. இது மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. மழை விட்டு பல நாட்களாகியும், சேதமடைந்த சாலைகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.
 
மக்களின் வெளிப்படையான இந்த விமர்சனத்தையொட்டி, சென்னையில் மோசமான சாலைகளைப் போட்ட 9 நிறுவனங்களுக்கு மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) விஜய் பிங்களே நோட்டீஸ் வழங்கினார். இதற்காக, அவர் உடனடியாக மாநகராட்சி இணை ஆணையர் பதவியில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டார். மேயர் துரைசாமியின் நடவடிக்கை காரணமாகத்தான் அவர் மாற்றப்பட்டார் என்று கூறப்பட்டது.
 
மேலும், சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை மழைக்கு முன்பே சரியாக தூர்வாராமல் இருந்ததே சாலைகளில் அதிகளவில் மழைநீர் தேங்கியதற்கு காரணம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் மீதும் மேயர் சைதை துரைசாமி குற்றம்சாட்டி மன்றக் கூட்டங்களில் பேசினார்.
 
இதையடுத்து, மேயர் துரைசாமி சென்னையை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் 10 ஏக்கரில் பிரமாண்ட பண்ணை வீடு கட்டியுள்ளார் என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் படத்துடன் அறிக்கை வெளியிட்டார். அதேபோன்று, சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க சில கான்ட்ராக்டர்கள் ரூ.200 கோடி மாநகராட்சிக்கு பணம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இப்படி, கடந்த சில நாட்களாக மேயர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கடந்த சனிக்கிழமை சைதை துரைசாமி ராஜினாமா செய்துவிட்டதாக திடீர் வதந்தி பரவியது. இதுபற்றி, டெல்லியில் இருந்த சைதை துரைசாமியிடம் பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, “செத்தவனிடமே நீ செத்து விட்டாயா? என்று கேட்பது போல் உள்ளது‘ என்று கோபமாகப் பேசினார். இது, அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் இருந்தது.
 
இந்நிலையில், மேயர் சைதை துரைசாமி அதிமுக கட்சியில் இருந்து முழுவதுமாக ஒரங்கட்டப்பட்டுள்ளது உறுதியானது.
 
நேற்று, முன்தினம் தமிழக அரசு சார்பில் கவிஞர் சுரதாவின் 94வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, சின்னையா, கோகுல இந்திரா, ரமணா, அப்துல்ரஹீம், மேயர் சைதை துரைசாமி, ஜெயவர்த்தன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தை பிரசுரிக்கும்படி, செய்தித்துறையில் இருந்து நேற்று முன்தினம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
 
ஆனால், நேற்று வெளியான நமது எம்ஜிஆர் பத்திரிகையில் மட்டும் இந்த புகைப்படத்தில் நடுவில் இருந்த மேயர் சைதை துரைசாமி படத்தை வெட்டி எடுத்து விட்டு பிரசுரித்துள்ளனர். அதேபோன்று, ஜெயா டி.வி.யிலும் மேயர் சைதை துரைசாமி விழாவில் பங்கேற்றதாக செய்தியில் குறிப்பிடவில்லை. இதில் இருந்து அதிமுகவில் இருந்து சைதை துரைசாமி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. மேயர் துரைசாமி அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சென்னை மாவட்ட செயலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.