வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (12:04 IST)

கட்ஜூ கூறிய கருத்து: நீதித் துறையையே இழிவுபடுத்தும் முயற்சி - கருணாநிதி

உச்ச நிதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறிய கருத்து நீதித் துறையையே இழிவுபடுத்தும் முயற்சி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது  குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நீதித்துறையின் மீதும், நீதிபதிகள் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. “சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்“ அமைந்து, விருப்பு-வெறுப்பு, வேண்டுதல்-வேண்டாமை அகற்றி, நடுநிலை நின்று தீர்ப்பும் கருத்துகளும் வழங்கிட வேண்டியவர்கள் நீதிபதிகள்.

நீதிபதிகள் பொறுப்பில் இருக்கும் போதும், ஓய்வுபெற்ற பிறகும் நடுநிலை தவறாது நடந்திட வேண்டியவர்கள். ஆனால் அண்மைக்காலமாக ஒரு சிலர் அந்த இலக்கணத்தை மறந்து, மனம் போனபடி கருத்துகளை அறிவிப்பது, ஜனநாயகத்தின் மிக முக்கியமான- நம்பகத்தன்மை வாய்ந்த நீதித்துறை எனும் தூணில் துளை போடுவதைப் போல பலவீனப்படுத்தி வருவதை நமது நாடு கண்டு வருகிறது.

நீதிபதி மார்கண்டேய கட்ஜூ சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2004 ஆம் ஆண்டு நவம்பரில் பதவிக்கு வந்து, ஓராண்டு காலமே அந்த பதவியில் இருந்து, அதன் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் சில காலம் இருந்து ஓய்வுபெற்றவர். 2004-2005 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக கட்ஜூ இருந்தபோது என்ன நடைபெற்றது என்பதை அவருடைய “முகநூல்“ பக்கத்தில் வலைதளம் ஒன்றில் ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்து அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்திலோ அல்லது நீதித்துறையின் நேர்மையான, சுதந்திரமான செயல்பாடுகளிலோ ஒரு போதும் தலையிட்டதில்லை என்றும், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் யார் பெயரையும் பரிந்துரை செய்ததில்லை என்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு முதலமைச்சர் மிகவும் மதிப்பளித்த காரணத்தினால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தாம் பதவி வகித்த ஓராண்டு காலத்தில் தமக்கு எந்த ஒரு பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

நீதிபதி கட்ஜூ, தமிழக முதலமைச்சரை பாராட்டுவதை பற்றி நமக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் தேவையில்லாமல் திமுக. பற்றியும் பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்திருக்கிறார்.

காங்கிரஸ் குடும்ப பாரம்பரியத்திலே வந்த கட்ஜூ காங்கிரஸ் ஆட்சி மத்தியிலே இருந்தபோது உயர்நீதிமன்ற நீதிபதியாக - தலைமை நீதிபதியாக - உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியையும், சலுகைகளையும் முழுமையாக அனுபவித்து விட்டு - ஓய்வுக்கு பிறகும் பிரஸ் கவுன்சில் ஆப் இண்டியாவின் மிக உயரிய தலைமை பொறுப்பை பெற்றிருக்கின்ற நிலையில், காங்கிரஸ் அரசின் மீது - அதன் பிரதமர் மீது பத்தாண்டுகளுக்கு பிறகு திடீரென்று குறை கூறுகின்ற இக்கட்டான சூழல் எப்படி ஏற்பட்டது?

காங்கிரஸ் ஆட்சியிலே பதவியைப் பெற்றுக்கொண்டு, தற்போது அந்த காங்கிரஸ் ஆட்சி முடிந்தவுடன், அந்த ஆட்சி மீதே குறை சொல்லுபவர் எப்படிப்பட்டவர் என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன? இன்னும் சொல்லப்போனால், குறிப்பிட்ட இந்த நீதிபதி மீதுதான் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. 2004-2005 ஆம் ஆண்டில் தமிழக உயர்நீதிமன்றத்தில் ஓராண்டு காலம் மட்டுமே தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார் கட்ஜூ.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நீதித்துறையிலேயே தலையிட்டதில்லை என்று அவர் பாராட்டு புராணம் பாடியிருக்கிறார் என்றால் அதிலே பொதிந்திருக்கும் உள்நோக்கம் என்ன? தலைமை நீதிபதியாக இருந்த ஒரே ஆண்டில் ஜெயலலிதாவை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டிருக்க முடியுமா? அதே ஜெயலலிதாவை பதவியை விட்டே விலக வேண்டுமென்று இதே நீதிபதி கடந்த ஆண்டு கூறியது கிடையாதா? நீதிபதியாக பல ஆண்டு காலம் இருந்தவர், உச்ச நீதிமன்றம் வரை சென்றவர், அந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் பற்றி பல ஆண்டுகளுக்கு பிறகு போகிற போக்கில் புழுதி வாரி இறைத்திருப்பது, நீதித்துறையையே இழிவுபடுத்தும் முயற்சி என்றுதான் கூற வேண்டும்.

கட்ஜூவின் கடந்த கால நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசக்கூடியவர், நீதிபதிகளுக்கே உரிய நடுநிலை தவறி, பொறுமையிழந்து கருத்து சொல்லக்கூடியவர், கோபக்காரர், காலையில் அவசரப்பட்டு சொன்னதை மாலையே மறுத்திடக்கூடியவர், முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும், இப்போது அவர் சொல்லியிருப்பது யாருக்கு உதவுவதற்காக என்பதையும், எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். முன்னாள் நீதிபதி ஒருவரை பற்றிய உண்மைகளை எடுத்துரைத்திட நேர்ந்தது, எனக்கு ஏற்பட்ட நல்ல வாய்ப்பு அல்ல என்றே நான் கருதுகிறேன்.“ இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.