வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 25 ஜூலை 2014 (12:47 IST)

நீதிபதி கட்ஜுவின் சொத்துக் கணக்கு என்ன? - திருப்பிக் கேட்டார் கருணாநிதி

எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள வீடுதான்; நான் திருப்பிக் கேட்கிறேன். இந்த நீதிபதியின் சொத்துக் கணக்கு என்ன?  என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுக்கு கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் பதில்கள் வருமாறு:-

உங்களுடைய  சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என்று நீதிபதி மார்க்கண்டேய  கட்ஜு கேட்டிருக்கிறாரே?

என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த  புத்தகம். நான் 5 முறை முதல்வராக இருந்தவன். சுமார் 70  திரைப்படங்களுக்கு என்னுடைய 25 ஆம் வயது முதல் திரைக்கதை, உரையாடல் எழுதியிருக்கிறேன்.

எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள தெரு வீடுதான். இந்தியாவில் உள்ள எந்த  முதல்வரும் இவ்வளவு சிறிய வீட்டில் வாழ்நாள் முழுவதையும்  செலவிட்டதாகத் தெரியவில்லை.

இந்த வீட்டைக் கூட எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு பொதுச் சொத்தாக்க, அறக்கட்டளைக்கு இப்போதே எழுதிக் கொடுத்து விட்டேன். நான் திருப்பிக் கேட்கிறேன்.

இந்த நீதிபதியின் சொத்துக் கணக்கு என்ன? இவர் புகழ்ந்த முதல்வரின் சொத்துக் கணக்கு என்ன?

உங்களை ஜாமீனில் விடுவித்தார் என்பதற்காக நீதிபதி ஒருவருக்கு தாங்கள் பல்வேறு உதவிகளைச் செய்ததாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு  சொல்லியிருக்கிறாரே?

நீதிபதி அசோக்குமார் என்னை ஒரு வழக்கில் ஜாமீனில் விடுவித்தார் என்பதே உண்மையல்ல.

2001 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஜெயலலிதா அரசில் நள்ளிரவில் காவல் துறையினர் அத்துமீறி வீடு புகுந்து என்னைத் துன்புறுத்திக் கைது செய்து, அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் என்னை ரிமாண்ட் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு, நீதிபதி அசோக்குமார் வீட்டிற்கு போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள்.

நீதிபதி காவல் துறையினரிடம் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்திற்கு முறைப்படி அனுப்பப்பட்டு விட்டதா? என்று கேட்ட போது காவல் துறையினர்  இல்லை என்றார்கள். வழக்கு பற்றிய விவரங்களும் அவர்களிடம் இல்லை. இந்த விவரங்கள் இல்லாமல் என்னை ரிமாண்ட் செய்யக்  கூடாது என்று திமுக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடினார்.

ஆனால் அந்த வாதத்தை மறுத்து விட்டு நீதிபதி அசோக்குமார் என்னை ரிமாண்ட் செய்தார் என்பதுதான் உண்மை. மேலும் நான் அப்போது  ஜாமீன் கோரவில்லை.

காரணம், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் சிறையிலேயே இருக்க விரும்பினேன். என்னைக் கைது செய்ததால் ஜெயலலிதா அரசுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்ததால், ஒரு சில நாட்களில் அரசாங்கமே என்னைச் சிறையிலிருந்து விடுவித்து விட்டது.

அதனால் நான் ஜாமீன் கேட்க வேண்டிய அவசியம் எழவில்லை“.

இவ்வாறு தமது கேள்வி பதில் அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கோபாலபுரம் வீடு மருத்துவமனையாக மாற்றப்படும் என முதல்வர் கருணாநிதி 2009இல் அறிவித்தார். அந்த வீட்டின் பத்திரத்தில் அவரது மகன்களான அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் 2009 செப்டம்பர் 25 அன்று கையெழுத்திட்டனர். இச்செய்தியை இந்த நேரத்தில் வெப்துனியா நினைவூட்டுகிறது.