வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (17:10 IST)

கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கீழே விழுந்து சாவு : சென்னையில் பரபரப்பு

மாணவியை கற்பழிக்க முயன்று பலியான வாலிபர்

கல்லூரி மாணவி ஒருவரை கற்பழிக்க முயன்ற நபர்,  தப்பியோடும் போது  தவறி கீழே விழுந்து மரணம் அடைந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சென்னை பொன்னேரிக்கு அருகே நந்தியம்பாக்கம் என்ற கிராமத்தில் வசிப்பவர் கவுஸ்(50). அவரின் மகள் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு ரயிலில் சென்று வருகிறார்.
 
அப்படி ரயிலில் செல்லும் போது, இமாம் உசேன்(26) என்பவருடன் நட்பு அவருக்கு ஏற்பட்டது. இமாம் ஆந்திராவில் உள்ள தடா பகுதியை சேர்ந்தவர். சென்னை மூஞ்சூருக்கு அருகே கொண்டக்கரை எனும் இடத்தில் ஒரு லாரி கண்டெய்னர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
 
அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நட்புடன் பழகிய அந்த கல்லூரி மாணவியை அவர் காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணோ அவரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.  ஆனால் அவர் விடாமல் அந்த பெண்னை தொந்தரவு செய்துள்ளார். பலமுறை அந்த பெண்ணின் பின்னாலேயே வீடு வரை பின் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. 
 
அவரின் தொல்லை தாங்காமல் அந்த மாணவி தங்களின் பெற்றோர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இமாம் உசேன். சில நாட்கள் கழித்து விடுதலையான அவர், மீண்டும் அந்த பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
 
பின்தொடர்ந்து வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் எப்படியாவது அந்த பெண்ணை அடைய திட்டமிட்ட இமாம், நேற்று நேராக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.
 
அப்போது அந்த மாணவியின் தந்தை வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் அந்த பெண்ணும் அவரின் தாயாரும் இருந்துள்ளனர். வீட்டிற்குள் சென்ற இமாம் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார். அதை தடுத்த அந்த பெண்ணின் தாயார் சத்தம் போட்டுள்ளார்.
 
இமாம் உடனே தான் கொண்டு வந்திருந்த பிளிச்சிங் பவுடரை இருவர் முகத்திலும் வீசினார். ஆனால் அவர்கள் சத்தம் போடுவதை நிறுத்தவில்லை. இதனால் பயந்து போன இமாம் அங்கிருந்த தப்பிக்க எண்ணி, வேகமாக ஓடியுள்ளார்.
 
அப்போது, வாசல் படி தடுக்கி இமாம் உசேன் கீழே விழுந்தார். அதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.