வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (11:56 IST)

’எங்களால் மக்கள் நலக் கூட்டணி உடையக் கூடாது’ - விடுதலைச் சிறுத்தைகள்

எங்களால் மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிட்டதாக பழிச்சொல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே திமுக கூட்டிய கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
 

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திமுக சார்பில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
திமுக கூட்ட உள்ள இந்த கூட்டத்திற்கு மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்காது என மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார். மேலும் திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை. இது ஒரு நாடகம் எனவும் அவர் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் மக்கள் நல கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறிய போது, ’காவிரி பிரச்சனை பொதுப்பிரச்சனை என்பதால் அனைத்துக் கட்சி கூட்டத்தை யார் கூட்டினாலும் பங்கேற்கலாம் என்ற கருத்தை மக்கள் நல கூட்டணியில் முன்வைத்தேன்.
 
ஆனால் கூட்டணியில் உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எங்கள் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என கூறினார்.
 
வைகோ மற்றும் திருமாவளவனின் மாறுபட்ட கருத்தால் அந்த கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் விசிக இந்த கூட்டத்திற்கு வந்தால் வரவேற்போம் என திமுக அழைப்பு விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார், “சென்னையில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் பங்கேற்ற பெரும்பாலானோர் திமுக பொருளாளர் ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருந்தனர்.
 
இந்த கருத்தின் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களை திருமாவளவன் சந்தித்தார். அப்போது, திமுகவின் கூட்டத்தை புறக்கணித்தால் தமிழர் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்பதாகிவிடும் என அவர்களிடம் சுட்டிக்காட்டினோம். ஆனால் எங்களது கருத்தில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
 
மேலும், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகள் தேர்தல் நடைபெறுவதால் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றால் நாம் அணி மாறிவிட்டோம் என கருத்து உருவாகும் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்தனர். அப்போது எங்கள் கட்சியின் விவசாய சங்க பிரநிதிகளையாவது அனைத்து கட்சி கூட்டத்துக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று கேட்டோம்.
 
அப்படி திமுக கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றால் மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிட்டதாக கருத்து உருவாகும் என்றனர்.
 
இதனால் எங்களால் மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிட்டதாக பழிச்சொல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவில்லை.