1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 22 மே 2017 (17:15 IST)

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் மாஃபா பாண்டியராஜன்?: ஆரம்பித்தது குழப்பம்!

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் மாஃபா பாண்டியராஜன்?: ஆரம்பித்தது குழப்பம்!

அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஓபிஎஸ் அணிக்கு சசிகலா அணியில் இருந்து முதல் ஆளாக வந்து ஆதரவு கொடுத்தது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அவர் தற்போது ஓபிஎஸ் அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட ஆரம்பித்தார். அப்போது சசிகலா அணியில் முக்கியமான நபராக இருந்தார் அப்போது அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன். அதன் பின்னர் நாளுக்கு நாள் ஒவ்வொருவராக ஓபிஎஸுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.
 
அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணமாக மாஃபா பாண்டியராஜன் ஓபிஎஸ் அணியுடன் இணைந்தார். இது ஓபிஎஸ் அணிக்கு பெரும் பலம் சேர்த்தது. அதன் பின்னர் ஓபிஎஸ் அணிக்கு மிகவும் உதவியாக இருந்தார் அவர்.
 
ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக மாஃபா பாண்டியராஜன் வலம் வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஓபிஎஸ் அணியினர் பிரதமர் மோடியை சந்தித்தனர். அதில் மாஃபா பாண்டியராஜன் இடம்பெறவில்லை. முக்கிய நிர்வாகிகள் 4 பேரை மட்டுமே டெல்லிக்கு அழைத்து சென்றார் ஓபிஎஸ்.
 
இதனால் மாஃபா பாண்டியராஜன் குழப்பத்தில் உள்ளதாகவும், கட்சி கூட்டங்களுக்கு செலவு செய்ய, வழக்குகளை சந்திக்க நான் வேண்டும்? ஆனால் பிரதமரை சந்திக்க மட்டும் நான் வேண்டாமா? என மாஃபா பாண்டியராஜன் பொங்கியதாக கூறப்படுகிறது.
 
அமைச்சராக இருந்த போது சசிகலா அணியில் இருந்து ஒபிஎஸ் பக்கம் வந்த என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். இனி ஓபிஎஸ் பக்கம் இருப்பது பயனளிக்காது என மாஃபா பாண்டியராஜன் கூறிவருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் அதிமுகவின் இரு அணிகளுமே பரபரப்பாக உள்ளது.