வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 13 செப்டம்பர் 2014 (08:34 IST)

மதுரையில் கல்லூரி மாணவி மீது அமிலம் வீச்சு

மதுரை, திருமங்கலம் அரசுக் கல்லூரி மாணவி மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் அமிலத்தை வீசியதால், அந்த மாணவி பலத்த காயமடைந்துள்ளார்.

திருமங்கலம் அண்ணாநகர் பகுதி அருகே, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டட வளாகத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக அரசு உறுப்புக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில், வகுப்பு முடிந்து மாணவ, மாணவியர் வீடுகளுக்குச் சென்றனர்.

இந்தக் கல்லூரியில், இளங்கலை(பி.ஏ) முதலாமாண்டு ஆங்கிலம் படிக்கும் பேரையூர் அருகே உள்ள சின்ன பூலாம்பட்டியைச் சேர்ந்த உதயசூரியன் என்பவரின் மகள் 17 வயதுடைய மீனா, இரண்டாமாண்டு பி.ஏ. ஆங்கிலம் படிக்கும் சங்கரபாண்டி மகள் 18 வயதுடைய அங்காளஈஸ்வரி உள்ளிட்ட சில மாணவிகள் கல்லூரியில் இருந்து புறப்பட்டனர்.

அந்த மாணவிகள், திருமங்கலம் பெருமாள் கோயில் அருகே உள்ள ராஜாஜி தெருவைக் கடந்து குறுகலான தெருவில் நடந்து சென்றனர்.

அப்போது, எதிரே வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், மீனாவின் முகத்தில் மது பாட்டிலில் ஊற்றப்பட்டிருந்த அமிலத்தை வீசினார். மீனா தப்பியோட முயன்றபோது மர்ம நபரும் தொடர்ந்து விரட்டிச் சென்று அமிலத்தை ஊற்றியுள்ளார்.

அப்போது மீனாவுடன் இருந்த அங்காளஈஸ்வரி அதைத் தடுக்க முற்பட்டபோது, அவர் மீதும் அமிலம் தெறித்தது. அமிலத்தை வீசிய மர்ம நபர் அங்கிருந்துத் தப்பியோடி விட்டார்.

படுகாயமடைந்த நிலையில் மீனாவும், அங்காளஈஸ்வரியும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அமிலத்தை வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபரைத் திருமங்கலம் காவல் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

மீனாவைக் குறிவைத்து அமிலம் வீசப்பட்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அமில வீச்சில் மீனாவின் கண் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்காளஈஸ்வரிக்கு முகத்திலும், கைகளிலும் அமிலத்தினால் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட மீனாவின் தந்தை உதயசூரியன் கடந்த 20 நாள்களுக்கு முன்னர் காலமானது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மாணவிகள் மீது அமிலம் வீசிய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணம் அளிக்க அரசுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தால் தமிழகத்தில் அமிலம் தாராளமாக விற்கப்படுவதாக மாதர் சங்கத்தினர் குற்றம் சாற்றியுள்ளனர்.