1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (11:24 IST)

செம்மொழி நிறுவனத் துணைத் தலைவர் நியமனம்: அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தமிழறிஞர் ஔவை நடராஜன் தொடுத்த வழக்கில், மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்குப் பிரகாசம் என்பவரை நியமித்த மத்திய அரசின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
 
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஔவை நடராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 
 
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட பல உயர் பதவிகளை வகித்துள்ளேன். இந்த நிலையில், மத்திய அரசு தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் தொடங்கப்பட்டது. 
 
இந்த மையத்தின் முக்கிய பணி, 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் மொழி குறித்து ஆராய்வது மற்றும் தமிழ் ஆராய்ச்சிப் படிப்புகளையும் மாணவர்களுக்கு வழங்குவது ஆகும். இந்த மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தச் செம்மொழி உயர் ஆராய்ச்சி மையத்தின் துணைத் தலைவராக என்னை நியமித்து, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, நான் இந்தத் துணைத் தலைவர் பதவியை ஏற்ற நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பேன். 
 
இந்த நிலையில், எந்த ஒரு முன்னறிவிப்போ, தகவலோ தெரிவிக்காமல், நான் வகித்து வரும் துணைத் தலைவர் பதவிக்கு, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் பி.பிரகாசம் என்பவரை நியமித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், கடந்த 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இந்த உத்தரவு, என்னைப் பணியில் நியமித்த உத்தரவுக்கு எதிராக உள்ளது. என்னுடைய பதவிக் காலம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இருக்கும்போது, என்னை அப்பதவியில் இருந்து நீக்கி, வேறு ஒரு நபரை அப்பதவியில் நியமித்தது சட்ட விரோதமாகும். எனவே, மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 
 
இவ்வாறு அதில் கூறியிருந்தார். 
 
இந்த மனு, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆஜராகி வாதிட்டார்.
 
இதையடுத்து, செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்துக்குத் துணைத் தலைவர் பதவிக்குப் பிரகாசம் என்பவரை நியமித்துப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.