வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (20:36 IST)

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலருக்கு அபராதம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

புதிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பதிலளிக்காத டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
 

 
திமுக நிர்வாகி டி.கே.எஸ்.இளங்கோவன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
 
இந்த மனுவில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.க்கு) 11 புதிய உறுப்பினர்களை கடந்த ஜனவரி 31ம் தேதி தமிழக ஆளுநர் நியமித்துள்ளார். இவர்கள் அனைவரும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்.
 
இவர்களை சட்டவிதிகளை பின்பற்றி உறுப்பினர்களாக நியமிக்கவில்லை. மேலும், இந்த நியமனத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 பேரில் பெரும்பாலானவர்கள், ஒரே சாதியை சார்ந்தவர்கள்.
 
இந்த 11 பேரில் 7 பேர் வழக்கறிஞர்கள். இவர்கள், ஒரு கிரிமினல் வழக்கில் தமிழக முதலமைச்சர் சார்பில் ஆஜராகியுள்ளனர். எனவே, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமனம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்று அறிவித்து, 11 பேரை உறுப்பினர்களாக நியமித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்” என்று கூறியிருந்தனர்.
 
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், மனுக்களுக்கு வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக ஆளுநரின் செயலர், தலைமை செயலர், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் செயலர், புதிய உறுப்பினர்கள் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப கடந்த மாதம் உத்தரவிட்டார்கள்.
 
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு வியாழனன்று (மார்ச் 31) விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை செயலர் மட்டும் பதில் மனு தாக்கல் செய்தார். மற்றவர்கள் யாரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர்.
 
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்யாத டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் செயலர் உள்ளிட்டோருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து உத்தரவிட்டனர். மேலும், ஜூன் 13ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.