1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 25 மார்ச் 2015 (19:27 IST)

தமிழக அரசின் பட்ஜெட் வெறும் வாய்ஜால ஏமாற்று வேலை - மு.கருணாநிதி

தமிழக அரசின் பட்ஜெட் வெறும் வாய்ஜாலத்திலேயே உள்ள ஏமாற்று வேலை என திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசின் நிதிநிலை கடும் நெருக்கடியில் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கையின் தொடக்கத்தில் வாசகங்களள் இடம் பெற்று இருப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசு மீது பட்ஜெட்டில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி மத்திய நிதியமைச்சர் அதிமுக-வின் தலைவியை அவரது இல்லத்திலேயே சந்தித்த போது முதலமைச்சருடன் இருந்து இந்த கோரிக்கைகளை எடுத்துச் சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
விவசாயிகளின் பிரச்சினை, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை, உடன்குடி மின் திட்டம், நெடுஞ்சாலை பணியாளர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்று கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். 
 
150 மெகாவாட் சூரியஒளி மின்சார திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் 3ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதில் எஞ்சியது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என கூறியுள்ளார். 
 
ஜெயலலிதா புகழ்பாடும் வார்த்தைகள் தான் நிதிநிலை அறிக்கையில் திரும்ப திரும்ப இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ள அவர் நாட்டு மக்களுக்கு பயன்படும் எந்தவிதமான அறிவிப்புகளும் இடம் பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வாய்ஜாலத்திலேயே உள்ள ஏமாற்று வித்தையை போலத் தான் உள்ளது என்றும் கருணாநிதி விமர்சித்துள்ளார்.