1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (15:27 IST)

முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன் ; பிணமாகி இருப்பேன் : ஸ்டாலின் கண்ணீர் உரை

இன்று நடைபெற்ற திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.
 
இன்று திமுக செயற்குழு சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த செயற்குழு கூட்டத்திற்கு திமுகவின் செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 
அப்போது, தனது உரையை தொடங்கிய ஸ்டாலின் கருணாநிதி கூறும் 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று கூறி பேச்சை தொடங்கினார். இதற்கு அரங்கத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது. 
 
அதன்பின் உணர்ச்சிகரமாக பேசத்தொடங்கிய ஸ்டாலின் “தலைவர் உடல்நிலை மோசமாகி மருத்துவர்கள் கை விரித்தவுடன், அவரை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தேன். வெட்கத்தை விட்டு சொல்வதெனில், முதல்வரின் கையை பிடித்து கெஞ்சிக் கேட்டேன்.

 
ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. அது பேரதிர்ச்சியாக இருந்தது. எனவே, இரவோடு இரவாக நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெற்றோம். திமுக வழக்கறிஞர் குழுவின் திறமையே அதற்கு காரணம். அந்த மோசமான சூழ்நிலையில் கூட அந்த செய்தி மகிழ்ச்சியை கொடுத்தது.
 
ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமான வந்திருக்காவிட்டால் கலைஞர் அருகில் என்னை புதைத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்த சூழ்நிலை எனக்கு ஏற்படவில்லை. அன்று மட்டும் தோல்வி அடைந்திருந்தால் என்னுடைய மரணம் நிகழ்ந்திருக்கும்” என அவர் கண்ணீர் மல்க பேசினார்.