வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (19:17 IST)

புதிய தொழில் மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தொழிலாளர்களுக்கு எதிரான புதிய தொழில் மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தொழில் சட்டங்கள் பலவற்றை இணைத்து, தொழிலாளர் உறவு மசோதா என்ற புதிய மசோதா மூலம் தொழில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய பாஜக அரசு முனைப்புடன் இருக்கிறது. அந்த மசோதா பல்வேறு வகையில் தொழிலாளர்களுக்கு விரோதமாகவே உள்ளன. ஒரு நிறுவனம் இனிமேல் 300 தொழிலாளர்களைக் கூட அரசின் அனுமதியின்றி வேலையை விட்டு நீக்கிவிட முடியும்.
 
தொழிலாளர் சங்கம் அமைக்க தொழிலாளர்கள் மட்டுமே இனிமேல் அனுமதிக்கப்படுவர். 7 தொழிலாளர்கள் சேர்ந்தால் சங்கம் அமைக்கலாம் என்பது மாற்றப்பட்டு, ஒரு கம்பெனியில் 10 சதவீத தொழிலாளர்களோ அல்லது 100 தொழிலாளர்களோ சேர்ந்தால்தான் தொழிலாளர் சங்கம் பதிவு செய்ய முடியும் என்கிறது புதிய மசோதா.
 
உண்மையில், இந்த மசோதா தொழிலாளர்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழித்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
 
அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று வந்த பாஜக அரசு, இப்போது பெரிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுவது போல் தெரிகிறது. எனவே, நாட்டில் உள்ள எண்ணற்ற தொழிலாளர்களின் நலனை மனதில் வைத்து இந்த புதிய தொழில் சட்டம் கொண்டு வரும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.