வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 22 அக்டோபர் 2014 (12:03 IST)

மக்கள் குறைகளை கேட்க தானியங்கி செல்போன் புகார் சேவையை மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்

தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிவதற்காக பிரத்யேக தானியங்கி செல்போன் புகார் பதிவு சேவையை திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
 
வடசென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதி, தாழ்வான பகுதிகள் நிறைந்த பகுதியாகும். இதனால், மழைக்காலங்களில் மக்கள் பெரிதும் அவதிப் படுகின்றனர். குண்டும் குழியுமான சாலைகள், குடிநீரில் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்றனர்
 
இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
 
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தனியாக பக்கங்களை தொடங்கி மக்கள் கருத்துகளை கேட்டு வருகிறார். இந்த வசதிகளை பயன்படுத்த இயலாத சாதாரண மக்களின் வசதிக்காக இப்போது, பிரத்யேக புகார் பதிவு தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளார். இதன்படி, 78108 78108 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் புகார்களை தெரிவிக்கலாம். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தனியாக ஒரு குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார்.
 
இந்த எண்ணுக்கு ஒருவர் டயல் செய்ததும், வணக்கம், நான் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உங்கள் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். உங்கள் கருத்துகள், ஆலோசனைகள், குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குறை நிறைவேறும் வரை எங்கள் குழுவினர் உங்களுடன் தொடர்பில் இருப்பார்கள் என்று மு.க.ஸ்டாலினின் பதிவு செய்யப்பட்ட குரல் கேட்கிறது. அதன்பிறகு ஒரு பீப் சத்தம் கேட்டதும், போன் செய்தவர், தங்கள் பகுதி குறைகளை பதிவு செய்யலாம்.
 
உடனடியாக சம்பந்தப் பட்டவரின் செல்போனுக்கு புகார் பதிவு எண்ணை எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகின்றனர். மேலும், தொடர்பு கொண்டதற்கு நன்றி. உங்கள் புகார் எங்கள் குழுவின் ஆய்வில் உள்ளது. விரைவில் உங்களை தொடர்பு கொள்வோம் என்ற தகவலும் அனுப்பப்படுகிறது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே தொகுதி மக்களுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த சேவையை ஸ்டாலின் தொடங்கியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.