செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (16:20 IST)

தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை திமுக இல்லாமல் எழுத முடியாது: மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்

தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுகவே காரணம் என்று அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
 
கடித விவரம்: தமிழகத்தின் தற்போதைய நிலை தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் (ஸ்டாலின்) எழுதிய கடிதத்தைப் படித்தேன். 
 
ஆட்சிப் பொறுப்பு இல்லாமல் 46 மாதங்கள் வனவாசம் இருப்பதாலேயே திமுகவின் தவறுகளையும், ஊழல்களையும் மக்கள் மறந்திருப்பர் என்ற எண்ணத்தில் கடிதத்தை எழுதியுள்ளீர்கள். 
 
ராமாயணத்தைக் கூனி இல்லாமலும், மகாபாரதத்தைச் சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ அதுபோல தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை திமுக இல்லாமல் எழுத முடியாது.
 
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறுவதற்கு உங்களுக்குத் தகுதி இல்லை. ராஜாஜி, காமராஜர் போன்றோரின் அறிவுரையை மதிக்காமல் 1971-இல் மதுவிலக்கை ரத்து செய்து, தமிழகத்தில் சாராயத்தை வெள்ளமென ஓடவிட்டவர் உங்கள் தந்தை கருணாநிதி. 
 
துணை முதல்வராக இருந்தபோது, நீங்களும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கூறவில்லையா?
 
அதிமுக ஆட்சியின் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும், தொழில் முதலீடு தொடர்பாகவும் பேசியுள்ளீர்கள். வரவேற்கிறேன். திமுக ஆட்சியில் ரூ.40,091 கோடி மதிப்புள்ள 37 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதன் காரணமாக 2.52 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தொழில்துறை அமைச்சர் பதவியை அப்போது கூடுதலாகக் கவனித்தபோது கூறினீர்கள். இது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டபோது, அதை நீங்கள் ஏற்க மறுக்கவில்லையா?
 
ஊழல்கள் தொடர்பாகவும் கடிதத்தில் கூறியுள்ளீர்கள். விஞ்ஞான முறையில் திமுக ஊழல் செய்வதாக சர்க்காரியா கமிஷனால் சான்றளிக்கப்படவில்லையா?
 
உலக அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தந்தது 2 ஜி ஊழல்தான். ரூ.1.76 லட்சம் கோடி மதிப்புள்ள அந்த ஊழலின் காரணகர்த்தா திமுகதான.
 
தொலைக்காட்சி பெட்டி, 2 ஏக்கர் நிலம் என்று இலவசங்களை வாரி இறைத்து மக்களைச் சோம்பேறிகளாக்கும் கலாசாரத்தைத் தொடங்கி வைத்தது திமுகதான்.
 
இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பாக நீலிக்கண்ணீர் வடித்துள்ளீர்கள். 
 
டாட்டா டைட்டானியம் ஆலையைத் தூத்துக்குடிக்குக் கொண்டு வந்து அங்குள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க முயன்றது திமுகதான். மின்சார பிரச்சனை, காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்னை என தமிழகத்தின் அத்தனை பிரச்னைகளுக்கும் திமுகவே காரணம்.
 
எனவே, தமிழகம் நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக உள்ளது தொடர்பாக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. மக்கள் விருப்பப்படி பாமக ஆட்சிக்கு வந்து மருத்துவராகிய நான் தமிழகத்தைக் குணப்படுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார்.