1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Updated : வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (14:54 IST)

தேர்தலில் திமுக 3–வது இடத்துக்கு வருவதே சந்தேகம் - மு.க.அழகிரி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற ஒரு விழாவில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:–
M.K.Alagiri
காரைக்குடியில் கால் வைத்ததும் நினைவுக்கு வருவது முன்னாள் எம்.எல்.ஏ. சிதம்பரம்தான். 1972–ல் எம்.ஜி.ஆரை கழகத்தை விட்டு நீக்கியபோது தனிக்கட்சி தொடங்கினார். அப்போது சிதம்பரத்தை எம்.ஜி.ஆர். அழைத்தார். ஆனால் அவர் செல்லவில்லை.
 
என்னோடு இருப்பவர்கள் பதவிக்கு ஆசைப்படாதவர்கள். சோதனையான நேரத்திலும், தொண்டர்களை பார்த்துக் கொள்கிறேன். என் பிறந்தநாள் விழாவுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியதால் என் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்கள். போஸ்டர் அடித்து ஒட்டியது குற்றமா? நாம்தான் கலைஞரையும், கழகத்தையும் காப்பாற்ற வேண்டும்.
 
தேனியில் திமுகவினர் சிலர் என்னை சந்தித்ததால் 5 பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவரையும் இப்படி நீக்கினால் எப்படி வெற்றி பெற முடியும்?
 
பணம் கொடுத்தவர்கள் திமுகவில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக தலைவர் தேர்தலை ஒத்தி வைத்தார். இங்கு போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் எனது நண்பர்தான். அவரது தந்தை ப.சிதம்பரத்திடம் நான் அமைச்சராக இருந்தபோது துறைரீதியாக சில சந்தேகங்கள் கேட்பேன். எனக்கு சிதம்பரம் பாடம் நடத்துவார். அதுபோல எச்.ராஜாவும் என் நண்பர்தான்.
 
இந்த தேர்தலில் திமுக 3–வது இடத்துக்கு வருவதே சந்தேகம்தான். நம்மை மதிக்காதவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். உங்கள் மனசாட்சிபடி நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று மு.க.அழகிரி கூறினார்.