வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (18:06 IST)

விடுதலையான மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகும், பயிற்சியும் அளிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

விடுதலையான தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகும், பயிற்சியும் அளிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
இராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ராமேசுவரத்தை சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி, விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். தங்களது பாரம்பரிய கச்சத்தீவு மீன்பிடி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 5 மீனவர்களையும் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தியதாக அவர்கள் மீது பொய்யாக வழக்கு போடப்பட்டது. அவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ராமேசுவரம் பகுதி மீனவர்கள், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
 
இக்கோரிக்கையை பரிசீலித்த ஜெயலலிதா அவர்கள், மீனவர்கள் சார்பில் வழக்காடுவதற்காக இலங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கவும் வழக்கு செலவுக்காகவும் ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். இதையடுத்து, 2012 ஜூன் 11ம் தேதி, மேல்முறையீட்டு மனுவின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, மீனவர்களின் குடும்ப த்தினர் போதிய வருமானமின்றி, வறுமையில் துன்பப்படுவதைக் கண்ட ஜெ. ஜெயலலிதா அவர்கள், மீனவ குடும்பத்தினருக்கு மாதம் ரூ.7,500 வழங்க உத்தரவிட்டார். மேலும், 5 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தை 2012-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ஜெயலலிதா வழங்கினார். மேலும், மேல்முறை யீட்டு வழக்கை தொய்வின்றி நடத்த கூடுதல் நிதியாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டது.
 
எனினும், தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த அதிர்ச்சி செய்தியை அறிந்த தாங்கள் அன்றே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினீர்கள்.  மேலும் தூக்குத்தண்டனை ரத்து செய்ய வலியுறுத்தி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வழக்குச் செலவிற்காக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு ரூ. 20 லட்சத்தை தமிழக அரசு சார்பில் அனுப்பி வைத்தீர்கள்.
 
ஐந்து மீனவர்கள் பிரச்னையில் தலையிட்டு அவர்கள் விடுதலைக்கு வழிவகுத்த தமிழக அரசிற்கும் எனது தொகுதி ராமநாதபுரம் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை யாழ்பாணம் சிறையில் இன்னும் வாடிக்கொண்டிருக்கும் 24 மீனவர்களை விடுவிக்கவும், திரு. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 82 படகுகளை மீட்பதற்கும் தமிழக அரசு உரிய ராஜதந்திர மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 
மேலும் ஐந்து மீனவர் சிறையில் இருந்த நிலையில் அவர்களுக்கான வழக்கு செலவுகளையும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கிய தமிழக அரசு  விடுதலையான ஐந்து மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு இவர்களுக்கு அரசு ஆழ் கடல் மீன் பிடித்தல் படகும் அதற்கான பயிற்சியும் அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.