வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (12:31 IST)

சமையல் எரிவாயு நேரடி மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நாடு முழுவதும், சமையல் எரிவாயுவுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்தத் திட்டத்ததிற்கு விண்ணப்பிக்கும் முறையை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
சமையல் எரிவாயுவுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த திட்டம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
 
நேரடி மானிய திட்டம் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் சிலிண்டர் மானிய தொகை போடப்படும்.
 
வினியோகஸ்தர்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழு தொகை கொடுத்து சிலிண்டர் பெற வேண்டும். வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக மானிய தொகையை செலுத்தி விடும்.
 
இந்தத் திட்டம் சிலிண்டர் பதுக்கல், அதிக விலைக்கு விற்றல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் ஒழிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.
 
இந்த முறையின் மூலம், ஒருவர் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை மானியத்துடன் பெறலாம். அதன் பிறகு கூடுதலாக சிலிண்டர் தேவைப்பட்டால் மானியம் அல்லாத முறையில் வினியோகிக்கப்படும்.
 
ஜனவரி 1 முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்திற்குள் சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் தங்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.
 
வங்கி கணக்கு தொடங்கிய பின்னர் வினியோகஸ்தர்களை அணுகினால் நேரடி மானியம் பெற என்ன வழிமுறைகள் என்பதை விளக்கி கூறுவார்கள்.
 
சமையல் எரிவாயு நேரடி மானியம் பெற ஆதார் அட்டை தற்போது அவசியம் இல்லை. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அதை கொண்டு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
 
சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் நேரடி மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கூறியதாவது:–
 
இந்த திட்டத்தின்கீழ் மானியம் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்கள் வங்கி கணக்கில் அரசு மானிய தொகையை செலுத்தி விடும். சிலிண்டர் வாங்கும் போது முழு தொகை (ரூ.950) கொடுத்து பெற வேண்டும். சிலிண்டர் வாங்கிய 3 நாட்களுக்குள் அவர்கள் கணக்கில் மானிய தொகை போய் சேரும்.
 
இந்தத் திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை உள்ளவர்களும் இல்லாதவர்களும் பயன் பெறலாம். ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் வினியோகஸ்தரிடம் சென்று வங்கி கணக்கு பாஸ்புக், ஆதார் அட்டை ஆகிய இரண்டையும் கொடுத்தால் 2 விண்ணப்ப படிவங்கள் வழங்குவார்கள். அதில் ஒன்றை பூர்த்தி செய்து வினியோகஸ்தர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 
மற்றொரு படிவத்தை பூர்த்தி செய்து வங்கியிடம் வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களில் தங்களது முகவரி, தொலைபேசி எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், கிளை, எந்த வங்கி போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.
 
ஆதார் அட்டை இல்லாதவர்கள், வங்கி பாஸ் புத்தகத்தை மட்டும் வினியோகஸ்தரிடம் கொண்டு சென்றால் அவர் ஒரு விண்ணப்ப படிவம் தருவார். அதை பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
 
பொதுமக்களுக்கு எரிவாயு ஏஜென்சிகள் உதவி செய்வார்கள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன. தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல் இந்தப் பணி தொடங்கியுள்ளது.
 
இப்போதே நீங்கள் வினியோகஸ்தரை அணுகி மானியம் பெற பதிவு செய்து கொள்ளுங்கள். மார்ச் மாதம் வரை கால அவகாசம் உள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே வங்கி கணக்கு தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 
வங்கி கணக்கில் மானியம் செலுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்கும் வசதியும் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.